வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை : மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து குரு அருளைப் பெற்றனர்.
மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் சைவ ஆதின திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதி குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா சிவநெறி தெய்வத் தமிழ் மாநாடு ஞானபுரீஸ்வரர் கோவில் பெருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படும்.
இதில் 11ம் நாள் குருபூஜை விழாவில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் துாக்கிச் சென்று ஆதின திருமடத்தின் நான்கு வீதிகளில் வலம் வருவர்.
மனிதனை மனிதன் துாக்கி செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சில அமைப்புகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த மாதம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தடை விதித்தார். மத வழிபாட்டு முறைகளுக்கு அரசு தடை விதித்ததற்கு ஹிந்து அமைப்பினர் பக்தர்கள் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக மே 7ம் தேதி ஆர்.டி.ஓ. ஆணை பிறப்பித்தார். இந்நிலையில் 11ம் நாளான நேற்று காலை குருஞானசம்பந்தர் குருபூஜை திருநாளையொட்டி தருமபுரம் ஆதின திருமடத்தில் தருமை ஆதினம் சிவபூஜை சொக்கநாதர் பூஜை குருஞானசம்பந்தர் திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்து வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து ஞானபுரீஸ்வரர் தர்மபுரீஸ்வரர் துர்க்கை அம்மன் கோவில்களில் வழிபாடு நடத்தினார். மதியம் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. மாலை மேல குருமூர்த்தத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இரவு தருமை ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திரு ஆபரணங்கள் அணிந்து திருக்கூட்ட அடியார்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.
பல்லக்கு ஆதீன திருமடத்தின் நான்கு வீதிகளிலும் வலம் வந்தபோது பக்தர்கள் பூர்ணகும்ப மரியாதை கொடுத்து சிறப்பு வரவேற்பு அளித்தனர். பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.ஆதின திருமடத்தில் உள்ள குருபூஜை மடத்தில் வழிபாடு செய்து ஞானக்கொலு காட்சியில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
மதுரை ஆதினம், செங்கோல் ஆதினம், சூரியனார் கோவில் ஆதினம், துலாவூர் ஆதினம், வேளாக்குறிச்சி ஆதினம், தருமபுரம் ஆதினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை எச்.ராஜா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை கண்டு தரிசித்து குரு அருளைப் பெற்றனர்.
பட்டினப்பிரவேசம் விழாவையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியையும் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தலா ஒரு தேக்கு செம்மர கன்றுகளை வழங்கும் திட்டத்தை தருமை ஆதீன குருமகா சன்னிதானம் தொடங்கி வைத்தார். தருமபுரம் ஆதின திருமடத்தின் நந்தவனத்தில் மரக்கன்றை நட்டார்.தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பட்டினப்பிரவேசம் விழாவை தடைசெய்யக் கோரி, மயிலாடுதுறை எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழர் உரிமை இயக்கம், விவசாயிகள் விடுதலை முன்னணி, வி.சி.க., உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 97 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE