திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில், பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில், ஆறு பேர் சிக்கினர். இந்தக் குவாரியில், கனிம வளத்துறை அனுமதித்த அளவையும் தாண்டி, 400 அடிக்கும் கீழே பள்ளம் தோண்டி, கற்களை எடுத்துள்ளனர்.
நான்கு மாதங்களுக்கு முன்பாகவே, 'கல் குவாரியை இயக்கக் கூடாது' என, கனிம வளத்துறை அதிகாரிகளும், மாவட்ட கலெக்டரும், வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனாலும், குவாரி தொடர்ந்து இயங்கி உள்ளது.இதேபோல, தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன என்ற அதிர்ச்சி தகவலை கூறினார், கனிம வள துறை அதிகாரி ஒருவர். அவர் மேலும் கூறியதாவது: விதிமுறைகள்கல் குவாரி அமைக்க, சில விதிமுறைகள் உள்ளன.முறைப்படி, கனிம வளத் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல் துறை அனுமதியோடு தான், குவாரிகளை இயக்க முடியும். வி
திமுறைப்படி குவாரி நடத்தினால், கோடிகளை வாரி சுருட்ட முடியாது. அதனால், பெரும்பாலான குவாரி அதிபர்கள், விதிமுறைகளை கண்டுகொள்வதில்லை. அரசியல் பின்னணியோடு, விதிகளை மீறி ஆபத்தான வகையில், கனிம வளங்களை கொள்ளை அடிக்கின்றனர். இதில், அதிகாரிகளுக்கும் பணம் கிடைப்பதால் கண்களை மூடிக் கொள்கின்றனர்.அடைமிதிப்பான் குளம் பகுதியில் மட்டும், ஆறு ஏக்கர் பரப்பளவில், ஆங்காங்கே பாறைகளை குடைந்து கற்களை எடுத்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில், 400 அடி ஆழத்திற்கும் கீழே, பாறைகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், பாறைகளை உடைக்க, கனிம வளத் துறை அனுமதி கொடுத்திருப்பது வெறும், 60 அடிக்கு தான்.நிலத்தில் இருந்து கீழ் நோக்கி தோண்ட தோண்ட பள்ளம் ஏற்படுவதால், உள்ளே வாகனங்கள் மற்றும் ஆட்கள் சென்று வர ஏதுவாக, வட்ட வடிவில் பாதைகள் அமைக்கப்படும்.ஒரு பாதையில் இருந்து கீழே செல்லும் மற்றொரு பாதைக்கு இடையில், அதிகபட்சம், 15 அடி மட்டுமே உயரம் இருக்கும்.அப்படி செய்தால், மேலிருந்து பாறைகள் சரிய நேரிட்டால், முதல் பாதையில் கற்கள் விழுந்து, கீழ்நோக்கி வராமல் தடுக்கப்படும்.
விபத்து தவிர்க்கப்படும்ஒருவேளை, பாறைகள் சரிவின் போது மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை கற்கள் சென்றாலும், 15 அடி உயரத்திற்கு அடுத்தடுத்து பாதைகள் அமைத்தால், கற்கள் சரியும் வேகத்தின் அளவு குறையும். இதனால், பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்படும்.ஆனால், விபத்து நடைபெற்ற குவாரியில், இந்த முறையை முற்றிலும் பின்பற்றவில்லை. இஷ்டத்துக்கு 100 அடி வரை, ஒரு பாதையில் இருந்து, மறு பாதைக்கு உயரம் வைத்துள்ளனர். இது தான் விபத்துக்கு முக்கிய காரணம்.இந்த குவாரிக்கு, 2018ல் கனிம வளத் துறை உரிமம் வழங்கியது; 2023 வரை நடத்தலாம். ஆனால், உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாறைகள் தோண்டப்பட்டன. இது தெரிய வந்ததும் தான், சில மாதங்களுக்கு முன் குவாரியை மூட உத்தரவிட்டனர்.
ஆனால், வாய் மொழி உத்தரவு என்பதால், உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை. சட்டத்துக்கு புறம்பாக குவாரி செயல்பட்டதாக, கனிம வளத் துறை அதிகாரி, விபத்து நடந்த பின் சொல்கிறார். விபத்து நடந்த பின், சபாநாயகர் அப்பாவு, கலெக்டர், கனிம வளத் துறை அதிகாரிகள் என எல்லாரும் வருகின்றனர்.
ஆனால், குவாரியில் என்னென்ன விதிமீறல்கள் நடந்துள்ளன? அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, பாறைகளை உடைத்தது ஏன்? கூடுதலாக பாறைகள் உடைக்கப்பட்ட அளவு எவ்வளவு என்பது உள்ளிட்ட எந்த விஷயம் குறித்தும், யாரும் அக்கறை செலுத்தவில்லை.காரணம், ஆட்சி அதிகாரத்தில் இருப்போரில் துவங்கி, குவாரிகள் இயங்கும் கிராமத்தில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் வரை, தங்கு தடையின்றி பாயும் பணம்.லஞ்சம்திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதி பெற்ற, 52 குவாரிகள் இருந்தாலும், பெரும்பாலான குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாறைகளை தோண்டி எடுத்து வருகின்றனர்.
இதுதவிர, உரிமம் பெறாத நுாற்றுக்கணக்கான குவாரிகளும் உள்ளன.இது, அரசு அதிகாரிகள், ஆளும் தரப்பினருக்கு நன்கு தெரியும். இதன் பின்னணியில், பல நுாறு கோடி ரூபாய் சட்டவிரோத வருமானம் கிடைப்பதால், உரிமம் பெறாத குவாரிகளை, அவர்கள் தெரிந்தே அனுமதிக்கின்றனர்.குவாரி நடத்த கனிம வளம், வருவாய், வனம், சுற்றுச்சூழல், காவல் துறை என, பல் துறை அதிகாரிகளிடமும் ஒப்புதல் பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கல் உடைக்க வேண்டும் என்றால், அதற்கு அனைத்து துறையினருக்கும் லஞ்சம் கொடுத்தாக வேண்டும்.அனுமதி பெறாத குவாரி என்றால், லஞ்சத்தின் அளவு கூடுதலாக இருக்கும், அவ்வளவு தான்.ஆட்சி அதிகாரத்தில் இருப்போரின் ஆசி பெற்றவர்கள் மட்டும் தான், தமிழகம் முழுக்க, குவாரி தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருநெல்வேலி, அடைமிதிப்பான் குளம் குவாரியில் பாறைகள் உருண்டு விழுந்து, அப்பாவிகள் உயிர் இழந்த சம்பவம் நடந்ததும், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லவில்லை.இரவில் நடந்த விபத்தை பார்வையிட, காலையில் தான் சென்றனர். இதனாலேயே, மீட்பு பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டு, உயிர் பலிகளை தடுக்க முடியாமல் போய் விட்டது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், தற்போது குவாரிகள் அதிக அளவில் இயங்குகின்றன. அதற்கு காரணம், கேரளாவுக்கு எடுத்து செல்லப்படும் கருங்கற்கள். கொச்சி -- திருவனந்தபுரம் மற்றும் கொச்சி -- ஆலப்புழா இடையே, கடற்கரை அரிப்பை தடுக்க, கல் கொட்டும் பணியும், பல இடங்களில் கருங்கல் சுவர் அமைக்கும் பணியும் நடக்கிறது.பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அந்த பணியை, தமிழக ஒப்பந்ததாரர்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில், முக்கிய பதவியில் இருந்தவருக்கு சொந்தமான ஒப்பந்ததாரர்கள், தற்போது அதிகார மட்டத்தில் இருப்போரிடம் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதன்படியே, தென் மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து, தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்களில் கருங்கற்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.கேரள திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் கோடிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என பலமட்டங்களுக்கும் செல்கின்றன.
விபத்துக்குள்ளான கல் குவாரி, திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோருக்கு சொந்தமானது. இதுபோன்று விதிமீறலில் ஈடுபடும் தொழிலதிபர்கள், நேரடியாக தங்கள் பெயரில் குவாரிகளை நடத்துவதில்லை. அதுபோலவே, செல்வராஜும், தன் கணக்குப்பிள்ளை சங்கரநாராயணன் என்பவர் பெயரில் உரிமம் பெற்று, குவாரி நடத்தியுள்ளார்.சேம்பர் செல்வராஜ், காங்கிரஸ்காரர். தற்போதைய அரசில் முக்கிய பொறுப்பில் இருப்பவருடன் ஒன்றாக, காங்கிரசில் பயணித்தவர்; அவரது சொந்தக்காரர். சம்பவம் நடந்ததும், குவாரி உரிமதாரரான சங்கரநாராயணன் மற்றும் மேலாளர் செபஸ்டின் ஆகிய இருவரை மட்டும், போலீசார் கைது செய்தனர்.பின்னர், கர்நாடகாவில் பதுங்கியிருந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE