மதுரை:மாப்பிள்ளை அவரு தான்... ஆனால் சட்டை என்னுது' என்ற செந்தில் காமெடி போல் கவுன்சிலர் அவங்க தான்... ஆனால் நாங்க தான் எல்லாமே' என வார்டு நிர்வாக பணிகளில் தலையிட்டு ஆக்ட்டிங்' கவுன்சிலர்களாக வலம் வர துவங்கி விட்டனர் சில பெண் கவுன்சிலர்களின் கணவர்கள்.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு, பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. மதுரையில் மேயர், 50 பெண் கவுன்சிலர்கள் உட்பட 4 மண்டல, 3 நிலை குழு தலைவர்களும் பெண்கள்தான். இதில் சில பெண் கவுன்சிலர்கள் சிலர் ஏற்கனவே கவுன்சிலராக இருந்துள்ளனர்.
இந்நிலையில் புதிதாக வந்த பல பெண் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் குறித்து எதுவும் தெரியவில்லை. அவர்களது கணவர்கள் பின்னால் இருந்து வழிகாட்டுவதில் தவறில்லை. ஆனால், தாங்கள் தான் எல்லாமே என 'பந்தா' காட்டும் கணவர்களில் சிலர் வார்டு நிர்வாக பணிகளிலும் தலையிடுகின்றனர்.பெண் கவுன்சிலர்களுக்கு வார்டு தொடர்பான புகார் தெரிவிக்க போன் செய்தால், கணவர்கள் தான் எடுத்து பேசுகின்றனர்.
கவுன்சில் கூட்டத்தில் மட்டும்தான் பங்கேற்கவில்லையே தவிர கவுன்சிலரின் அலுவலகம் துவங்கி, நிர்வாக நடவடிக்கைகளில் இறங்கி கலங்கடிக்கிறார்கள். சில வார்டுகளில் மாநகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள், பெண் கவுன்சிலர்களின் கணவர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட துவங்கி விட்டது.
இவ்வாறு கணவர்கள் நிர்வாகத்தில் தலையிடுவதை தி.மு.க., அ.தி.மு.க., கட்சி தலைமை, மாநகராட்சி நிர்வாகம் கணவர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும். தடுக்க தவறினால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படும் என்கிறார்கள் பொதுமக்கள்.