சின்னமனூர்:சின்னமனுார் - மார்க்கையன்கோட்டை ரோட்டில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சின்னமனுார் ஒன்றியத்தில் மார்க்கையன்கோட்டை, குச்சனூர், அய்யம்பட்டி, சிந்தலச்சேரி, புலிகுத்தி, எல்லப்பட்டி, கூளையனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய, தினமும் சின்னமனுார் வந்து செல்கின்றனர். 24 மணி நேரமும் ரோட்டில் வாகன போக்குவரத்து உள்ளது. ஆனால் சின்னமனூர் முதல் மார்க்கையன்கோட்டை வரை ரோடு குறுகலாக உள்ளது.
அதைவிட முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் குறுகலாக உள்ளது. பாலம் அருகே பழைய பாலம் பயன்படுத்தாமல் அப்படியே உள்ளது. உத்தமபாளையத்தில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டிய போது, பழைய பாலத்தை பராமரிப்பு செய்து அதையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அதனால் அங்கு இருவழிப்பாலம் பயன்பாட்டிற்கு வந்தது.
அதேபோல் மார்க்கையன்கோட்டை ரோட்டில் பயனற்ற நிலையில் உள்ள பழைய பாலத்தை பராமரிப்பு செய்து, இருவழிப் பாலம் அமைத்தால், போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.