கோவை:பெட்ரோல், டீசல் விலை குறைந்ததை அடுத்து கோவையில் வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சளுக்கு ஆளாகினர். இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை நேற்று முன்தினம் இரவு அதிரடியாக குறைத்தது.
இதைத்தொடர்ந்து நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை குறையத்துவங்கியது.கோவையில் ஒரு லிட்டர் பெட்ரோல்விலை லிட்டருக்கு, 8.22 ரூபாய் குறைந்து, 103.08 ரூபாய்க்கும், அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை, 6.70 ரூபாய் குறைந்து, 94.70 ரூபாய்க்கும் விற்கிறது. கடந்த, 45 நாட்கள் இடைவெளிக்குப்பின் மத்திய அரசு விலையை குறைத்துள்ளது
அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று அதிகாலை, 6:00 மணி முதலே அமலுக்கு வந்தது.வாகன ஓட்டுனர்கள் கூறுகையில்,'மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், சரக்கு போக்குவரத்து கட்டணம் குறையும்; காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவதற்கு வாய்ப்பாக அமையும். மாதந்தோறும் பெட்ரோல் நிரப்பி வாகனத்தை பயன்படுத்துபவர்களுக்கு, 200 முதல், 400 ரூபாய் வரை சேமிப்பதற்கு வாய்ப்பாக அமையும்' என்றனர்.