கோவை;ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்பிப்பதற்கான காலக்கெடுவை நீடித்து பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில், பல ஆயிரம் மாணவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பல்கலைகள், உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதைக்கருத்தில் கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.இதை ஏற்றுக்கொண்ட பல்கலை மானியக்குழு கடந்த டிச., மாதம் ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கொரோனா தாக்கம் இன்னும் இருப்பதால், காலக்கெடுவை மேலும் ஆறு மாதம் நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற பல்கலை மானியக்குழு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உயர் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆலோசனைக் குழு, மாணவர்களின் பணியின் மதிப்பாய்வு மற்றும் மேற்பார்வையாளரின் பரிந்துரையின் அடிப்படையில், ஒவ்வொரு துறைத் தலைவர் அத்தகைய காலக்கெடு நீட்டிப்பை வழங்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.