கோவை:பைன் பியூச்சர் நிறுவனத்திடமிருந்து புதிதாக கைப்பற்றப்பட்ட, மேலும் ஐந்து இடங்களிலுள்ள, 18 ஏக்கர் சொத்துக்களை ஏலமிட, கோவை டான்பிட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை, பீளமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த 'பைன் பியூச்சர் 'ஆன்லைன் நிதி நிறுவனம், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, பங்குதாரர்கள் செந்தில்குமார், 45, விவேக், 35, நித்யானந்தம், 30, மேலாளர் சத்யலட்சுமி, 35, ஆகியோர், 2013ல் கைது செய்யப்பட்டனர்.கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த முதல் கட்ட குற்றப்பத்திரிகையில், 25 ஆயிரத்து, 389 டெபாசிட்தாரரிடம், 189 கோடி ரூபாய் மோசடி என தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் வந்த புகாரை தொடர்ந்து, மேலும் 23 ஆயிரத்து, 887 டெபாசிட்தாரர்களிடம், 170 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. மொத்தம், 49 ஆயிரத்து, 276 பேரிடம், 359 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கடந்தாண்டு தாக்கல் செய்த இறுதி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.43 ஏஜன்டுகள்குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். குற்ற நகல் வழங்கப்படாததால், சாட்சி விசாரணை துவங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.இதற்கிடையில், பைன் பியூச்சர் நிறுவனத்தின், 20க்கும் மேற்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு, அவற்றை ஏலமிடுவது தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தனியாக நடந்து வருகிறது. இதில் எதிர்தரப்பினர், ஐகோர்ட்டில் இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளனர். இதனால், சிவில் வழக்கும் நிலுவையில் உள்ளது.இச்சூழ்நிலையில், பைன்பியூச்சர் நிறுவன பங்குதாரர்களுக்கு சொந்தமான மேலும் ஐந்து புதிய சொத்துக்களை, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கெம்பநாயக்கன்பாளையத்தில், தனித்தனி சர்வே நம்பரில் உள்ள,18 ஏக்கர் விவசாய நிலத்தை, உறவினர்கள் பெயருக்கு மாற்றி, பிறகு பினாமிகளுக்கு பவர் பத்திரம் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சொத்துக்களின் மதிப்பு சுமார், 1.15 கோடி ரூபாய். பைன் பியூச்சர் டெபாசிட்தாரர்களிடம் மோசடி செய்த பணத்திலிருந்து, இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.சொத்துக்களை அரசு கையகப்படுத்தி, ஏலத்தில் விட உத்தரவிடக்கோரி, அரசு தரப்பு வக்கீல் கண்ணன், கோவை டான்பிட் கோர்ட்டில் கடந்த, 5ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, மனுவில் குறிப்பிடப்பட்ட சொத்துக்களை கைப்பற்றி, மாவட்ட வருவாய் அலுவலர் பொது ஏலத்தில் விடுவதற்கு, அனுமதியளித்து உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE