கோவை:பள்ளியில் படிக்கும் மகள் போன் வைத்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த தாய் கண்டித்தார். அதை ஏற்காத பள்ளிச்சிறுமி வீட்டில் இருந்து தப்பிய சம்பவம் கோவையில் நடந்துள்ளது.கோவையை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுமி காணாமல் போனதாக போலீசாருக்கு புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா விசாரணை நடத்தினார். இதில், பள்ளிச்சிறுமி நீண்ட நேரம் தனிமையில் இருப்பதை கண்ட தாய், சந்தேகத்தில் விசாரணை நடத்தினார். இதில், சிறுமியிடம் மொபைல் போன் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.சிறுமியை கடுமையாக கண்டித்தார். இதை ஏற்காத சிறுமி, தாய் கவனிக்காத நேரத்தில் வீட்டில் இருந்து தப்பி விட்டார்.
அவரை காணாமல் திடுக்கிட்ட தாய், போலீசில் புகார் தெரிவித்துள்ளார். நடந்த சம்பவத்தை அறிந்து போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் தோழிகள், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.* இதேபோல், மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் மாயமான சம்பவம் குனியமுத்துாரில் நடந்துள்ளது. அவிநாசியில் இருந்து குரூப், 2 தேர்வு எழுதுவதற்காக கோவை வந்த இரண்டு குழந்தைகளின் தாய் மாயமான சம்பவம், சரவணம்பட்டியில் நடந்துள்ளது. மாயமான பெண்களை குனியமுத்துார், சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.