பல்லடம்:காடா துணி உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சு, நுால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று முதல், 15 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.துணி உற்பத்தி சார்ந்த விசைத்தறி, ஸ்பின்னிங் உள்ளிட்டவற்றை சார்ந்து, பல லட்சம் தொழிலாளர்கள் பஞ்சு விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:
பஞ்சு பதுக்கல், பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு தடை விதித்தல், நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூர் தொழில் துறையுடன் இணைந்து கடந்த, 16, 17ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினோம்.நுால் விலை உயர்வால், ஏற்கனவே, 50 சதவீத உற்பத்தி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தொடர்ந்து நுால் விலை அதிகரித்து வருவதால், மீண்டும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்தோம். இதனால், தினசரி, 20 கோடி ரூபாய் மதிப்பிலான, ஒரு கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி மற்றும் துணி விற்பனை பாதிப்பால், தொழில் மேற்கொள்ள இயலாத சூழல் உள்ளது. கோடிகளில் முதலீடு செய்து, தற்போது வங்கி கடன்களை செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உற்பத்தி நிறுத்தம் காரணமாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உள்ளது.ஒட்டுமொத்த தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று, மத்திய, மாநில அரசுகள், நுால் விலையை கட்டுப்படுத்தவும், பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE