தமிழகம்
கணவர் ஸ்மார்ட் போன் வாங்கி தராததால் பெண் தற்கொலை
ஆண்டிபட்டி:சித்தயகவுண்டன்பட்டி பிரகதீஸ்வரன் 28. இவர் அதே பகுதி கவிதாவை 22, இரு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.கணவரின் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்தனர். கவிதா தனது கணவரிடம் மொபைல் போன் வாங்கி தருமாறு கோரிக்கை வைத்தார். பணம் இல்லை என கணவர் மறுத்தார்.
இந்நிலையில் கணவரின் தம்பி, அவரது மனைவிக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தந்தார். இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு கவிதா வெளியேறினார். கணவர், உறவினர்கள் தேடினர்.பின், தண்ணீர் இல்லாத கிணற்றில் ரத்தக்காயங்களுடன் கவிதா இறந்த நிலையில் கிடந்தார்.
ஆண்டிபட்டி தீயணைப்பு துறையினர் உதவியுடன் கவிதா உடல் மீட்கப்படடு, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மகனால் கொன்று புதைக்கப்பட்டதந்தையின் உடல் தோண்டி எடுப்பு
சென்னை:சென்னையில், மகனால் வெட்டிக் கொல்லப்பட்டு, ராணிப்பேட்டையில் புதைக்கப்பட்ட தந்தையின் உடலை, போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். தலைமறைவாக உள்ள கொலையாளியை பிடிக்க, ஐந்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, வளசரவாக்கம், ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் குமரேசன், 78; ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவர் மனைவி கடந்தாண்டு இறந்தார். இவர்களுக்கு குணசேகரன் என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.
காணவில்லை
அனைவருக்கும் திருமணமான நிலையில், வளசரவாக்கத்தில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் மகன் குணசேகரன் குடும்பத்துடனும், இரண்டாவது தளத்தில் குமரேசன், கணவரை இழந்த மூத்த மகள் காஞ்சன மாலாவுடன் வசித்து வந்தார்.
கடந்த 15ம் தேதி காஞ்சன மாலா, அவரது மகள் வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய போது, தந்தையை காணவில்லை. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்த போது, ரத்தக்கறைகள் இருந்தன. சந்தேகமடைந்த அவர் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில், மாதா மாதம் வரும் கடை வாடகை, ஓய்வூதிய பணத்தை, மகன் குணசேகரனுக்கு கொடுக்காமல், மகள்களுக்கு குமரேசன் கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன், குமரேசனை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என, தெரிய வந்தது.
குணசேகரனின் தலைமறைவு
இதை உறுதிப்படுத்தியது. மேலும், குணசேகரனுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் திருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.அவர் அளித்த தகவலின்படி, குணசேகரன், கடந்த 17ம் தேதி குமரேசனை கொலை செய்து, உடலை 'பிளாஸ்டிக் டிரம்'மில் அடைத்து, ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அங்கு, ரியல் எஸ்டேட் உரிமையாளர் வெங்கடேசன்உதவியோடு,அவருக்கு சொந்தமான வீட்டுமனையில், ௧௮ம் தேதி டிரம்மோடு புதைத்துள்ளார்.
பரிசோதனை
இந்நிலையில், நெமிலி தாசில்தார் ரவி, வளசரவாக்கம் போலீசார் முன்னிலையில், வருவாய்த் துறையினர், புதைக்கப்பட்ட டிரம்மை நேற்று தோண்டி எடுத்தனர். குமரேசன் உடலை வெளியே எடுத்து, அங்கேயே உடற்கூறு பரிசோதனை செய்தனர். பின், அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக, ரியல் எஸ்டேட் உரிமையாளர் வெங்கடேசன், 54, பள்ளம் தோண்டிய பெருமாள், 55, ஆட்டோ டிரைவர் திருமூர்த்தி, 52, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான குணசேகரனை போலீசார் தேடி வருகின்றனர். அவரை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தியா
23 ஆக நடித்து ஏமாற்றிய 50 வயது பெண்திருமணத்துக்கு தயாரான இளைஞர் 'ஷாக்'
மாண்டியா: கர்நாடகாவில், முகநுாலில் இருந்த அழகான இளம்பெண்ணின் போட்டோவை பார்த்து மயங்கிய இளைஞர், காதலித்து திருமணத்துக்கு தயாரான போது, உண்மை தெரிந்துஅதிர்ச்சி அடைந்தார்.
கர்நாடக மாபிலம் மாண்டியா நாகமங்களாவில் வசிக்கும், 25 வயது இளைஞர் ஒருவர், முகநுாலில், 'பிரண்ட்ஸ் ரிக்வெஸ்டில்' இருந்த அழகான பெண்ணின் போட்டோவை பார்த்து மயங்கினார்.

அறிமுகம்
'லைக்ஸ்' பட்டனை அழுத்தினார். அப்பெண், தன்னை துமகூவைச் சேர்ந்த, 23 வயதான ஆஷா என, அறிமுகம் செய்து கொண்டார்.இருவரும் மொபைல் போனில் பேசிக்கொண்டனர். இவர்களின் அறிமுகம், நாளடைவில் காதலாக மாறியது.
ஆஷா தன் கஷ்டங்களை கூறி, இளைஞரின் அனுதாபத்தை பெற்று, 3.50 லட்சம் ரூபாயை தன் வங்கிக் கணக்கில் பெற்றுக் கொண்டார். 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களையும் பெற்றுக் கொண்டார்.இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள, அந்த இளைஞர் முடிவு செய்தார். பெண்ணின் பெரியம்மா என கூறிக்கொண்ட பெண் வந்து, திருமணம் நிச்சயித்தார்.
மே 20ல் ஆதிசுஞ்சனகிரியின், கால பைரவேஸ்வரர் சுவாமி கோவிலில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பணம் பறிப்பு
மணமகனின் குடும்பத்தினர், உறவினர்கள் வந்தனர். ஆனால் மணமகளின் பெரியம்மாவை தவிர, வேறு யாரும் வரவேயில்லை. சந்தேகமடைந்த இளைஞரின் குடும்பத்தினர், அந்த பெண்ணை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், 50 வயதான அந்த பெரியம்மா தான், இளம்பெண் ஆஷா என்ற பெயரில் பேசி நடித்து, இளைஞரை ஏமாற்றி பணம் பறித்ததுதெரிந்தது.
இதைக் கேட்டு இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். ஆயினும், அவர் புகார் தராததால், அப்பெண்ணை எச்சரித்த போலீசார், பணத்தை திருப்பி தருவதாக எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினர்.
வீட்டையே விஷ வாயு கூடமாக்கிடில்லியில் தாய், 2 மகள் தற்கொலை
புதுடில்லி:டில்லியில் வீட்டையே விஷ வாயு கூடமாக மாற்றி, தாய் மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தெற்கு டில்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஒரு வீட்டின் கதவு நேற்று முன்தினம் பல மணி நேரம் திறக்கப்படவில்லை.வீட்டின் ஜன்னல்களும் மூடப்பட்டிருந்தன. அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்தனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். கதவுக்கு அருகே சில காகிதங்கள் கிடந்தன.அதில் கூறப்பட்டிருந்ததாவது:நாங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளோம். இந்த வீடு முழுக்க 'கார்பன் மோனாக்சைடு' விஷவாயு பரவி உள்ளது; இது தீ பிடிக்கக் கூடியது. அதனால் கதவை திறந்ததும் உள்ளே வர வேண்டாம்.
ஜன்னலை திறந்து விடுங்கள். உள்ளே நெருப்பு பற்ற வைக்க வேண்டாம். மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டாம். உள்ளே இருந்து வரும் நச்சு புகையை சுவாசிக்க வேண்டாம். இவ்வாறு அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.இதைப்படித்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தேவையான முன்னேற்பாடுகளுடன் வீட்டுக்குள் சென்றனர்.
அங்கு ஒரு அறையில் உள்ள கட்டிலில் ௫௫ வயது பெண், ௨௫ வயதுடைய இரண்டு பெண்கள், இறந்து கிடந்தனர். கட்டிலுக்கு அருகில் கரி எரிக்கப்பட்டு, அதிலிருந்து புகை வெளி வந்து கொண்டிருந்தது. சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டரும் திறக்கப்பட்டிருந்தது.
நிலக்கரி புகை மற்றும் சமையல் காஸ் கலந்து, கார்பன் மோனாக்சைடு என்ற விஷ வாயுவை ஏற்படுத்தி, அதை சுவாசித்து, அவர்கள் தற்கொலை செய்தது தெரிந்தது.மேலும், விஷவாயு வெளியே போகக் கூடாது என்பதற்காக வீட்டு கதவுகள், ஜன்னல் கதவுகளை பாலித்தீன் கவர்களை வைத்து மூடியுள்ளதும் தெரிந்தது. மூன்று பெண்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டது, மஞ்சு, ௫௫, அவரது மகள்கள் அன்ஷிகா, ௩௦, அங்கூ, ௨௬, ஆகியோர் என தெரிந்தது.மஞ்சுவின் கணவர் உமேஷ் ஸ்ரீவத்சவா கடந்த ஆண்டு ஏப்ரலில் கொரோனாவால் இறந்துவிட்டார். இதன்பின், மஞ்சு மற்றும் இரு மகள்களும் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். அக்கம் பக்கத்தினரிடம் பேசுவதை நிறுத்திவிட்டதும், விசாரணையில் தெரிந்தது.மூவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE