தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் மருத்துவமனை அமைக்க, சென்னை மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட 30.25 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் சூழலில், வாரிசுதாரர்கள் நிலத்தை ஒப்படைக்கும்படி கோரி வருகின்றனர். இதனால், தாம்பரம் சுற்றுவட்டார மக்களுக்கான மருத்துவ சேவைக்காக, கிங்ஸ் மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் அழகப்பா செட்டியார் என்பவர், 30.25 ஏக்கர் நிலத்தை, 1946ல் சென்னை மாநகராட்சிக்கு தானமாக வழங்கினார்.அந்த இடத்தை, மருத்துவமனை கட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, தானப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.சுதந்திரத்திற்கு முன் வழங்கப்பட்ட இந்த நிலத்தை, 76 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி பயன்படுத்தாமலும், பராமரிக்காமலும் இருந்து வருகிறது.

இதனால் சிலர், இந்த நிலத்தை ஆக்கிரமித்து, 'கிரிக்கெட் அகாடமி' என்ற பெயரில் கட்டணம் வசூலித்து, கிரிக்கெட் பயிற்சி அளித்தனர்.மேலும், உள்ளூர் அரசியல்வாதிகள் வாயிலாக, ஒரு சென்ட் இடத்தை 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யும் முயற்சிகளும் நடந்தன.இதுகுறித்து, நம் நாளிதழ் அவ்வப்போது செய்தி வெளியிட்டு, இந்த நிலத்தை காப்பாற்றி வருகிறது. இதற்கிடையே, ஆக்கிரமிப்பை தடுக்க சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, 66 லட்சம் ரூபாய் செலவில் தொழுநோய் மருத்துவமனை கட்டப்பட்டது.
அவற்றிற்கு டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படாதால், இன்று வரை கட்டடமும் பயனற்று கிடக்கிறது.இந்த இடத்தில், தனியார் குழந்தைகள் இல்லம் கட்டப்பட்டு, மின் இணைப்பும் பெறப்பட்டு உள்ளது. இதுபோன்ற சிலர், இரண்டு ஏக்கர் பரப்பளவு வரை, நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்.மீதமுள்ள நிலத்தில் கருவேல மரங்கள் அதிகரித்து, புதர் மண்டிக் கிடக்கிறது. சென்னைக்கு மிக அருகில், மருத்துவ கட்டமைப்புக்கு 30.25 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டும், 76 ஆண்டுகளாக கேட்பாரற்று, நிலம் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் அனைத்தும், மத்திய மற்றும் வட சென்னை பகுதியில் தான் அமைந்துள்ளன. தென் சென்னை மற்றும் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில், போதிய அளவில் அரசு மருத்துவமனைகள் இல்லாத நிலையே இன்றளவும் தொடர்கிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பின் சிகிச்சை பெற விரும்புவோர் கூடுவாஞ்சேரி, வண்டலுார், பெருங்களத்துார், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, அண்ணா சாலை என, இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசலுக்குப் பின் தான், சென்னை ராஜிவ்காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ஓமந்துாரார் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.

இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல், பலர் ஆம்புலன்சில் உயிரிழக்கும் சம்பவம் இன்றளவும் தொடர்கிறது.கடந்த 2019ல் லண்டன் சென்ற அப்போதைய முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர், அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டனர்.அதன் கிளையை தமிழகத்தில் துவங்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர். சென்னையில் தங்களது கிளையை துவக்க, கிங்ஸ் மருத்துவமனை நிர்வாகமும் விருப்பம் தெரிவித்தது.
மருத்துவமனை பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய இந்த மாடம்பாக்கம் நிலத்தில், 'கிங்ஸ் மருத்துவமனை' அமைக்க வேண்டுமென, அப்பகுதி மட்டுமின்றி, சுற்றுவட்டார மக்களும் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில், தானமாக அளிக்கப்பட்ட நிலம், 76 ஆண்டுகளாக மருத்துவ சேவைக்கு பயன்படுத்தப்படாமல் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், தானமளித்த அழகப்பா செட்டியாரின் வாரிசுகள் நிலத்தை ஒப்படைக்கும்படி, மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்கில், 76 ஆண்டுகளாக நிலம் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், நிலம் குறித்து பரிசீலிக்கும்படி, மாநகராட்சிக்கு நீதிமன்றமும் அறிவுறுத்தி உள்ளது.இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர், மாடம்பாக்கம் நிலத்தை சமீபத்தில் ஆய்வு செய்தனர்.அப்போது, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்பது, மருத்துவ சேவைக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சி பகுதிகளில், போதிய அளவிலான மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன. அதே நேரம், மும்பை மாநகராட்சியைப் போல், சென்னை மாநகராட்சியும் மருத்துவக் கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.குறிப்பாக, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையை மேம்படுத்தி, மருத்துவக் கல்லுாரியாக அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாடம்பாக்கம் மருத்துவமனையை பொறுத்தவரையில், புதிய மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அமைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.இவ்வாறு அமைக்கப்பட்டால், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.
அதே நேரம், லண்டன் கிங்ஸ் மருத்துவமனை அமைக்க அரசு முடிவெடுத்தாலும், நிலத்தை வழங்கவும் மாநகராட்சி தயாராக உள்ளது. இந்த நிலம் குறித்த விவகாரத்தில், முதல்வர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்டுகொள்ளாத மாநகராட்சி
ஆங்கிலேயர் காலத்தில் பல இடங்கள், சென்னை மாநகராட்சிக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளன. அவை, மாநகராட்சி எல்லை பகுதிகளிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் உள்ளன. சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதில் பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.இவற்றை மீட்க, எந்த அரசியல் கட்சியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE