வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: தனியார் பட்டா நிலத்தை கையகப்படுத்துவது சிரமம் என்பதால் தனியாருடன் இணைந்து வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்துவது என்று வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்ட, 1961ம் ஆண்டு முதல் பொருளாதாரத்தில் பின் தங்கியோர், குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீடுகள் கட்டித்தரும் பணியை மேற்கொண்டுள்ளது. இதுவரை செயல்படுத்திய 400க்கும் மேற்பட்ட திட்டங்களின் வாயிலாக, 4 லட்சத்து 31 ஆயிரம் குடும்பத்தினர் பயன் பெற்றுள்ளனர்.
வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பட்டா நிலத்தை வாரியம் கையகப்படுத்தியது. இதை எதிர்த்தும், கூடுதல் இழப்பீடு கோரியும் தொடரப்பட்ட வழக்குகளால், வாரியத்துக்கும், பயனாளிகளுக்கும் சிக்கல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதனால், வீடு, மனை வாங்கியோர், நிலத்தை இழந்த உரிமையாளர்கள், வாரிய அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த பிரச்னைகளால், இனி தனியார் பட்டா நிலத்தை கையகப்படுத்தி, வீட்டு வசதி திட்டம் செயல்படுத்துவது சிரமம் என்ற நிலைக்கு வீட்டு வசதி வாரியம் வந்து விட்டது.வரும் காலங்களில் தனியாருடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்துவது என்றும் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
வழக்குகள் நிறைய தொடரப்படுவதால், வீட்டு வசதி திட்டங்களுக்காக தனியார் பட்டா நிலம் கையகப்படுத்துவது பெரும் சிரமம் ஆகி விட்டது. இதனால் புதிய திட்டங்களை செயல்படுத்தும் வாரியத்தின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. நிலம் எடுப்பதில் பாதிக்கப்படுவோருக்கு நியாயமான இழப்பீடு தர வேண்டும் என்ற 2013ம் ஆண்டு சட்டம் காரணமாக, நிலம் எடுப்பதற்கு மாற்று வழிமுறைகளை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
விரைவாகவும், விலை குறைவாகவும், அச்சுறுத்தல் இல்லாத வகையிலும், அனைவரும் ஏற்கக்கூடியதாகவும், வழக்கு விவகாரங்கள் ஏற்படாத வகையிலும் நிலம் பெறுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் பழைய முறைப்படி நிலம் எடுக்கவும், மற்ற இடங்களில் தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து (பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் - பிபிபி) திட்டம் செயல்படுத்தலாம் என்றும், வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனர் செய்துள்ள பரிந்துரை ஏற்று, அரசின் முதன்மை செயலாளர் ஹித்தேஷ் குமார் மக்வானா ஆணை பிறப்பித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE