வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 'போக்சோ' வழக்குகள் அதிகரித்து வருகின்றன. வளரிளம் பருவத்தில், தங்கள் பிள்ளைகளின் நட வடிக்கையை பெற்றோர் கண்காணிப்பதோடு, விழிப்புணர்வு அவர் களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டியது அவசியம்.

சிறார்கள் மீதான பாலியல் குற்ற செயல்கள் அதிகரித்ததால், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கவும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் 'போக்சோ' சட்டம் கொண்டு வரப்பட்டது.குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் தாக்கலாகும் வழக்குகளை, ஓராண்டுக்குள் விரைந்து விசாரித்து, தீர்ப்பளிக்க வேண்டும் என, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விழியுங்கள் பெற்றோரே!
'டாலர் சிட்டி'யான, திருப்பூரில், பலதரப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். இங்கு குழந்தைகள், சிறார்கள் மீது பாலியல் அத்துமீறல் ஏதாவது ஒரு வகையில் நடக்கிறது. இது போலீசாரின் பார்வைக்கு செல்லும் போது, அவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.
'போக்சோ' வழக்குகளில், பெரும்பாலானவை, காதல், தகாத நட்பு, ஆசை வார்த்தைக்கு மயங்கி வீட்டை விட்டு வெளியேறும் போது, அத்துமீறல்கள் நடக்கின்றன. சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் அன்றாடம் ஒரு வழக்காவது பதிவாகிறது. இதில், பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகள் அனைவரும், 12 முதல், 17 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.சிறுமிகள் சிலரிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து, நடைபெறும் பாலியல் அத்துமீறல், குழந்தை பிறக்கும் வரை வெளிவருவதில்லை. அதன் பின்னரே, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

பெண் சிறார்களை பாதுகாக்க, போலீசார், குழந்தைகள் நலக்குழு, சைல்டு லைன் உட்பட பல அமைப்புகள் உள்ளன. பள்ளி, கல்லுாரி, பொதுமக்கள் கூடும் இடங்கள் என, பல இடங்களில் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.வீடுகளில் தங்களின் குழந்தைகளை சில பெற்றோர்கள் கண்காணிக்காமல் அலட்சியமாக இருப்பதன் விளைவே இது. எனவே, வளரிளம் (டீன் ஏஜ்) பருவத்தில் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிப்பதோடு, விழிப்போடு இருந்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.
201 வழக்குப்பதிவு
திருப்பூர் மாநகரில் கடந்த இரண்டு ஆண்டில், (2021 மற்றும் 2022 ஏப்., வரை) 82 'போக்சோ' வழக்கு; புறநகரில், 119 வழக்கு என, மாவட்டத்தில் மொத்தம் 201 வழக்கு பதிவாகியுள்ளது. இரண்டு ஆண்டில், 'போக்சோ' வழக்கில், 27 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மற்ற வழக்குகள் போலீஸ், கோர்ட் விசாரணையில் உள்ளது. மாநகரில், கடந்த, 2013 முதல், 2022 ஏப்., வரை, 231 'போக்சோ' வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இம்மாதத்தில், மாநகர் மற்றும் புறநகரில், ஐந்து வழக்குகள் பதிவாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE