வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் பார்ப்பதை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் மகனும், எம்எல்ஏ.,வுமான உதயநிதி நடித்து கடந்த மே 20ம் தேதி வெளியான திரைப்படம் ‛நெஞ்சுக்கு நீதி'. இப்படத்தின் முதல் காட்சியில் துவங்கி தற்போது வரை பல ஊர்களில் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் உட்பட அக்கட்சி நிர்வாகிகள் கூட டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி மக்களுக்கு இலவசமாக கொடுத்து படத்தை பார்க்க வைப்பதாக கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் தாங்களும் சேர்ந்து ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்து வருகின்றனர். அதனை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து படத்தை பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர். சில இடங்களில் படம் பார்க்க வருபவர்களுக்கு திமுக.,வினர் உணவு அளித்து வரவேற்பதாகவும் கூறப்படுகிறது.
எம்எல்ஏ.,க்கள், அமைச்சர்கள், மேயர்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் இந்தத் திரைப்படத்தை ஓட வைப்பதற்காக இப்படியெல்லாம் செய்வதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்ததாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மேயர்கள் உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள். படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE