சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஓய்வு வயதை உயர்த்தாதீங்க!

Added : மே 23, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தி.ஸ்ரீராம் பாலாஜி, கொழையூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 62 ஆக உயர்த்த, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக, சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சட்டசபை தேர்தல் நேரத்தில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்' என, தி.மு.க., வாக்குறுதி
ஓய்வு வயதை உயர்த்தாதீங்க!

தி.ஸ்ரீராம் பாலாஜி, கொழையூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 62 ஆக உயர்த்த, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக, சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சட்டசபை தேர்தல் நேரத்தில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது.

அதை தற்போது நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதால், அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்த, அரசு ஊழியர்கள் தயாராகி வருகின்றனர். எனவே, அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக, ஓய்வு வயதை, 62 ஆக உயர்த்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுத்தால், அது, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அதிர்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது, 15 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஊழியர் மூன்று பேர் வேலைகளை சேர்த்து செய்வதால், பணியில் காலதாமதமும் ஏற்படுகிறது.

அத்துடன், இப்போது பணியில் உள்ள அரசு ஊழியர்களின் மாத சம்பளம், 50 ஆயிரம் முதல், 2 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இவர்களின் ஓய்வு வயதை உயர்த்துவதால், அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை தான் ஏற்படும். அதற்குப் பதிலாக, புதியவர்களை வேலைக்கு சேர்த்தால், அவர்களுக்கு முதலில் வழங்கப்படும் சம்பளம் குறைவாகவே இருக்கும்; கூடுதல் நபர்களையும் பணிக்கு அமர்த்த முடியும். இதன் வாயிலாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதுடன், காலி பணியிடங்களும் நிரம்பி, அரசு எந்திரமும் சுறுசுறுப்பாக இயங்கும். எனவே, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்காமல், புதிய வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்பதே, அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்பார்ப்பு.

***


அனைவர் கவனமும் நம் பக்கம் திரும்பும்!

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இத்தாலியின் ரோம் நகரில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது, சாதாரண விஷயமல்ல; இது, முதல்வர் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது' என, அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். உண்மையில் இது, குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமன்றி, தமிழ் உணர்வு உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி தான். அதே நேரத்தில், நம் நாட்டின் புராதன மொழிகளான சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் வெறுக்கும் திராவிட செம்மல்களுக்கு, அமெரிக்காவில் பார்த்த ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.

அங்குள்ள பல்கலை ஒன்றில் நடந்த பட்டமளிப்பு விழாவை காணும் வாய்ப்பு கிடைத்தது. நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியா சென், தலைமை விருந்தினராக பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில், துவக்கத்தில் ஒரு இந்திய பெண்மணி கடவுள் வாழ்த்து பாடினார். கல்வி கடவுள் சரஸ்வதியை துதித்து, சமஸ்கிருதத்தில் அந்த பெண் பாடியதைக் கேட்ட போது, நம் இந்திய மொழிக்கு கடல் கடந்து கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை நினைத்து நெகிழ்ச்சியடைந்தேன். அதேபோல, சுவிட்சர்லாந்து நாட்டின் ரயில் நிலையத்தில் கண்ட வாசகமும், மிகவும் ஆச்சரியம் அளித்தது.

அதாவது, 'பயணியரை வரவேற்கிறோம்' என்ற பொருள் உடைய வாசகம், உலகின் பல்வேறு மொழிகளிலும், அங்கு இடம் பெற்றிருந்தது. அவற்றில், 'ஸ்வாகத்' என்ற ஹிந்தி வார்த்தையும் இருந்ததை பார்த்த போது, ஒரு இந்தியனாக மிகுந்த பெருமை அடைந்தேன். இப்படி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றான ஹிந்தியை, இங்கிருக்கும் திராவிட ஆட்சியாளர்கள் புறக்கணிப்பது துரதிருஷ்டமானது. இனியாவது ஹிந்தி படிப்பதற்கான, பேசுவதற்கான வாய்ப்பை இளம் தலைமுறையினருக்கு ஏற்படுத்துங்கள். தமிழக எம்.பி.,க்கள் பார்லிமென்டில் ஹிந்தியில் பேசும் நிலைமை உருவாக வேண்டும். அப்படி பேசினால், ஒவ்வொரு இந்தியரின் கவனமும் தமிழகத்தின் பக்கம் திரும்பும்.

***


தரலாமே பேரறிவாளனுக்கு டாக்டர் பட்டம்!

வி.செந்தாமரை குமரன், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளிகள், நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கு, 1998ல் துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம். இவர்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்காமல், 11 ஆண்டுகளுக்கு மேலாக ஜனாதிபதி காலம் தாழ்த்தியதாக கூறி, குற்றவாளிகளை துாக்கிலிட தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். அத்துடன் நிற்கவில்லை; இவர்களது துாக்குத் தண்டனையையும், 2014ல், ஆயுள் தண்டனையாக குறைத்து விட்டது உச்ச நீதிமன்றம்.

இன்று தங்களுக்கு அதிகாரம் தரக்கூடிய, இந்திய அரசியல் சட்டத்தின், 142வது பிரிவை பயன்படுத்தி, முக்கிய குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது அதே உச்ச நீதிமன்றம். இவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு என்னவென்றால், ராஜிவை கொல்ல மனிதவெடிகுண்டாக செயல்பட்ட விடுதலை புலி தனுவின், இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டுக்கான, 'பேட்டரி'யை வாங்கிக் கொடுத்தார் என்பது... எந்த உச்ச நீதிமன்றம் இவரை குற்றவாளி என தீர்ப்பளித்து துாக்கு தண்டனை விதித்ததோ அதே நீதிமன்றம் தான், விடுதலையும் செய்திருக்கிறது. இது, சாதாரண நிகழ்வு அல்ல; சாதனையே!

இல்லையெனில், ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையானதும் முதல்வரை உடனே, அன்றைய தினமே சந்திக்க முடியுமா? சந்திக்கச் செல்லும் போது தமிழக அரசின் முதன்மைச் செயலர், 'பேரறிவாளருக்கு' கை கொடுத்து வாழ்த்தி, முதல்வர் ஸ்டாலினிடம் அழைத்துச் செல்கிறார். அவரோ ஆரத்தழுவி, அருகில் அமரச் செய்து வாழ்த்தி உள்ளம் பூரிக்கிறார். இத்தருணத்தை, 'டிவி' சேனல்கள் அனைத்தும் 'லைவ்' செய்கின்றன. இவ்வளவு மரியாதை கிடைப்பதற்கு, பேரறிவாளன் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்க வேண்டும்!

அதைப்பாராட்டி, தமிழகத்திலுள்ள பல்கலைகள் அவருக்கு டாக்டர் பட்டத்தை உடனே வழங்கிடலாம். இப்படியொரு வாய்ப்பு, எந்த பல்கலைக்கும் இனி கிடைக்காது. ஒரு தமிழனுக்கு பட்டம் வழங்கிட... அதுவும் ராஜிவ் கொலை வழக்கில், தமிழக அரசின் பேராதரவுடன் விடுதலையான குற்றவாளிக்கு பட்டம் வழங்கிட, வருங்காலத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.

ஆகவே பல்கலைகளே... பட்டம் வழங்கிட தயாராகுங்க... இந்தியாவில் அதிக டாக்டர் பட்டம் வாங்கிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை காட்டிலும், பேரறிவாளனுக்கு வழங்கிட வேண்டும்; 31 ஆண்டுகள் சிறையில் இருந்து தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். சினிமாக்காரர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கொண்டிருக்காமல் இவரைப் போன்ற, 'தியாகி'க்கு வழங்கி பெருமை சேர்த்துக் கொள்ளுங்கள். காலம் தாழ்த்தினால்... வேறு யாராவது முந்திக்கொள்வர்... போங்கள், சீக்கிரமே போய் வழங்குங்கள்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
24-மே-202218:56:56 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\ஒரு ஊழியர் மூன்று பேர் வேலைகளை சேர்த்து செய்வதால், பணியில் காலதாமதமும் ஏற்படுகிறது.\\ .... அவங்க எல்லாம் வேலையே செய்யலைன்னுதானே நெனைச்சுக்கிட்டிருக்கோம் ? மிஞ்சி மிஞ்சி போனா ஒருத்தர் வேலைய மூணு பேர் செய்யறதா வெச்சுக்கலாம் ......... மத்தபடிக்கு பாலாஜி ஸ்ரீராம் சொல்றது மீதியெல்லாம் சரியே
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-மே-202218:20:06 IST Report Abuse
D.Ambujavalli இணைந்து இருந்த கூட்டத்தினர் எது செய்தாலும் சதி என்று தெரிந்திருக்காதா ? சும்மா பேட்டரியை பொம்மைக்காக, டார்ச் லைட்டுக்காகவா வங்கச் சொல்லுவார்கள் ? அந்த பேட்டரியால் ஒரு உயிரில்லை, கூட பதினேழு அப்பாவைகள் இறப்பு, பலரின் ஊனம், எல்லாம் நிகழ்ந்துள்ளது இவரை விடுவித்ததை 'அங்கிருந்தும் ' இங்கிருந்தும் பார்ப்பவர்கள் இடும் சாபத்தைவிட தண்டனை உள்ளதா?
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
24-மே-202208:51:18 IST Report Abuse
Rajarajan முதலில் ஒரு அடிப்படை கருத்தை கூறிவிடுவோம். அரசியல் வேறு, நிர்வாகம் வேறு. இரண்டும் இரண்டு வெவ்வேறு துருவங்கள், என்றுமே இணையாது. (தற்போதைய தமிழக நிதியமைச்சர் மட்டும் விதிவிலக்கு. அவர் கார்பொரேட் நிறுவனத்தில் வேலைசெய்த, பொருளாதாரம் படித்தவர். எனவே பொருளாதார கருத்துக்களை தெள்ள தெளிவாக கூறுகிறார். விவாதிக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.) சில பொதுவான கருத்துக்களை பாப்போம். அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் சுமார் இரண்டு ஆண்டுகள் முன்பே, அவர்கள் மனநிலை ஓய்வு மற்றும் ஓய்வூதியத்தை தானாகவே முன்கூட்டியே செட் செய்து கொள்ளும். இதில் வயதொத்த ஆரோக்கிய பிரச்சினைகளான, ரத்த அழுத்தம், மூட்டுவலி, தைராய்டு மற்றும் மூட்டு தேய்மானத்தை சரிசெய்துகொள்ளவும் மாட்டார்கள். இனி சிறிது காலத்தில் நல்ல பணப்படிகளுடன், ஓய்வூதியம் பெற்று வாழ்க்கையை நிம்மதியாக கழிக்கப்போகிறோம் என்ற மனநிலைக்கு வந்துவிடுவதால், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தாங்களாகவே வேலை செய்யும் மனநிலையிலிருந்து விலகி விடுவர். எனவே, இவர்களை வேலைசம்பந்தமாக பொதுமக்கள் அணுகினால், எரிச்சல், கோபம், மனசோர்வு போன்றவற்றால், எரிந்து எரிந்து விழுவர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, வேலை சுணக்கம் ஏற்படுவது இயல்பு. இதைத்தவிர, மாதம் சுமார் ஐம்பதாயிரம் சம்பளம் என்றாலும், நான்கு வருடமாக நாற்பத்தியெட்டு மாதத்திற்கு கணக்கு போட்டு கொள்ளுங்கள். இதைத்தவிர, படிகள், போனஸ் மற்றும் ஓய்வூதியம் அதற்க்கு தகுந்தாற்போல் உயரும். இது எவ்வளவு பல லட்சம் கோடி வெட்டி செலவை அரசுக்கு ஏற்படுத்தும் என்று கணக்கிடுங்கள். இதுவே, தனியார் நிறுவனம் என்றால், முதியவர்களுக்கு இப்படி சும்மா உட்காரவைத்து சம்பளம் தருவார்களா? அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காகவும், நிர்வாக தகுதியின்மை காரணமாகவும், இந்த அனாவசிய பல்லாயிரம் கோடி ரூபாய் சுமையை சுமப்பது திருவாளர் தனியார் ஊழியர் மற்றும் ஏழை பாழாய் தான். இதுபற்றி, என்றாவது எந்த மத்திய / மாநில அரசாவது, பொதுமக்களிடம் வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளார்களா அல்லது பொதுமக்களிடம் அவர்கள் வரி நிதியை பயன்படுத்த முன் அனுமதி பெற்றுள்ளார்களா? இதை எந்த நீதிமன்றமும் தானே முன்வந்து வழக்காக எடுத்துக்கொள்ளவும் செய்யாது. ஏனெனில், அவர்களும் அரசு ஊழியர்களே. சாராய கடைகளை அரசு மூடவேண்டும் என்று போர்க்கொடி பிடித்த, கோபாலபுரத்து குடும்ப கட்சி ஆட்சி இப்போது. ஆனால் அந்தோ பரிதாபம். அவர்களே சாராய வருமானத்தில்தான் சம்பளமே பெறுகின்றனர். அரசியல்வாதிகளுக்கும், அரசு ஊழியருக்கு என்றுமே இந்த விஷயத்தில் மனசாட்சி உறுத்தவே உறுத்தாது. ஏனெனில், ஆசைக்கும், தேவைக்கும் என்றுமே வெட்கம் இருப்பதில்லை. கடைசியாக, இனி அரசு நிறுவனங்களில் அறுபது வயதை கடந்தவர்கள் ஓய்வெடுக்க வசதியாக குளுகுளு அறை, கட்டில், வேலா வேலைக்கு சத்துணவு, செவிலியர் உபசரிப்பு வசதி கேட்டு வேலைநிறுத்தம் செய்தாலும் ஆச்சர்யமில்லை. இந்த சூழலில், தேவையற்ற அரசு நிறுவனங்கள் தேவையா? ஐயா, மெத்தப்படித்த, திறமைசாலி மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் அவர்களே, உங்கள் நிதி நிர்வாகத்தில் ஒரு பெரும் கரும்புள்ளி காத்திருக்கிறது. துணிந்து நிர்வாக முடிவெடுக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X