திருப்போரூர் : கொட்டமேடு - மானாமதி இடையே சிற்றுந்து இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் இருந்து, கொட்டமேடு - மானாமதி சாலை பிரிந்து செல்கிறது.எட்டு கி.மீ., உள்ள இச்சாலையில் மயிலை, எடர்குன்றம், ராயமங்கலம், பெரியார் நகர் உள்ளிட்ட கிராமங்கள், வனப்பகுதியை ஒட்டியுள்ளன.
இப்பகுதிகளுக்கு '119பி' என்ற அரசு பேருந்து, காலை, மதியம் மற்றும் மாலை ஆகிய நேரங்களில், மேற்கண்ட கிராமங்கள் வழியாக பல தடங்களுக்கு இயக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக இரு ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால், பேருந்து போக்குவரத்து இல்லாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், இரவில் செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனம் இல்லாதவர்கள், இச்சாலையில் செல்லும்போது வழிப்பறி, விஷ ஜந்துகள் தீண்டுமோ என, அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். இத்தடத்தில் சிற்றுந்து இயக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:கொட்டமேடு - மானாமதி தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து நிறுத்தப்பட்டதால், மிகவும் தவிக்கிறோம்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு பணிக்கு செல்வோர், இரவு வீடு திரும்ப, பேருந்து இல்லாததால் சிரமப்படுகிறோம்.வனப்பகுதி வழியாகமக்கள் நடந்து செல்லும்போது, வழிப்பறி நடக்கும் சூழல் உள்ளது.கொட்டமேடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கிராமத்திற்கு உள்ளே வருவதற்கு வீட்டில் உள்ளவர்கள் அல்லது தெரிந்தவர்களை துணைக்கு அழைத்து செல்லும் நிலை உள்ளது.எனவே, இப்பகுதியில் சிற்றுந்து இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.