சென்னை: தமிழகத்திலிருந்து ஆறு ராஜ்யசபா 'சீட்'களில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அடையாளம் காண்பதில், அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிடம் தயக்கம் காணப்படுகிறது. எனினும், இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று(மே 24) துவங்குகிறது.
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, ஆறு எம்.பி.,க்களின் பதவி காலம் ஜூன் 29ல் நிறைவடைகிறது. அதனால், புதிதாக ஆறு எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடும் போட்டி
ஆறு எம்.பி., பதவிகளுக்கும், இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது; வரும் 31ம் தேதி, மனு தாக்கல் செய்ய கடைசி நாள். தேர்தல் நடத்தும் அலுவலராக, சட்டசபை செயலர் சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, துணை செயலர் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவர்கள் அறையில், அலுவலக வேலை நாட்களில், காலை 11:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுக்கள், ஜூன் 1ம் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுவை வாபஸ் பெற விரும்புவோர், ஜூன் 3ம் தேதி மாலை 3:00 மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம். போட்டி இருந்தால், ஜூன் 10ம் தேதி காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். மாலை 5:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், தி.மு.க., கூட்டணியில் நான்கு எம்.பி.,க்களையும், அ.தி.மு.க., கூட்டணியில் இரண்டு எம்.பி.,க்களையும் பெற முடியும். தி.மு.க., சார்பில் மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஒரு இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அக்கட்சியில் ஒரு பதவிக்கு பலத்த போட்டி நிலவுகிறது.
அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அக்கட்சியிலும் இரண்டு பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. கட்சி வழிகாட்டிக் குழு கூடி விவாதித்தும், வேட்பாளர் தேர்வில் தயக்கம் நீடிக்கிறது. அதனால், ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் சேர்ந்து வேட்பாளரை இறுதி செய்ய, அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் பல முறை பேசியும் இழுபறி நீடிக்கிறது. இன்னும் வேட்பாளர்களை முடிவு செய்யாததால், சீட் பெறும் முயற்சியை அக்கட்சியினர் கைவிடவில்லை.
கட்டணம்
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவோர், 'டிபாசிட்' தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பை சேர்ந்தவர்கள், 5,000 ரூபாய் கட்டினால் போதும். வேட்புமனுவை குறைந்தபட்சம், 10 எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிய வேண்டும்; இல்லையெனில் நிராகரிக்கப்படும். எனவே, அரசியல் கட்சி வேட்பாளர்களை தவிர, மற்றவர்கள் போட்டியிட முடியாது. விளம்பரத்துக்காக சிலர் பெயரளவுக்கு மனு தாக்கல் செய்வர்.தற்போதைய சூழலில், தி.மு.க., கூட்டணி நான்கு, அ.தி.மு.க., கூட்டணி இரணடு வேட்பாளர்களை மட்டும் நிறுத்த உள்ளதால், போட்டியின்றி ஆறு எம்.பி.,க்களும் தேர்வாக வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க.,வில் எம்.பி., கேட்டு, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், கோகுல இந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ., இன்பதுரை, மாவட்ட செயலர் கணேசராஜா, மகளிர் அணி நிர்வாகி கிருத்திகா, மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் அபரூபா சுனந்தனி, நடிகை விந்தியா உட்பட 60 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்கள் அனைவரிடமும் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டு, இருவரை தேர்வு செய்து, நாளை மறுநாள் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ரமேஷ் ஜெய்ராம், தகவல் பகுப்பாய்வு அணி தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன் ஆகிய நால்வரின் பெயர்கள் அடிபடுகின்றன. சிதம்பரத்திற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆதரவும், பிரவீன் சக்கரவர்த்திக்கு ராகுல் ஆதரவும் உள்ளது. வேட்பாளர் பெயர், வரும் 30ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE