காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் பாலாற்றில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த பருவ மழைக்கு சேதமாகி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. புதிய பாலம் கட்டும் பணி இன்னும் துவங்காததால் வரும் பருவ மழைக்கு தற்காலிக சாலை தாக்கு பிடிக்காமல் பாதிப்பு ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த ஆண்டு பெய்த பருவ மழை வெள்ளத்தில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் பெரும்பாக்கம் பகுதி மக்கள் ஆற்றுக்கு அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்ல முடியவில்லை. அதே போல் அந்த பகுதி மக்கள் காஞ்சிபுரம் செல்வதற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ - மாணவியர் பாலாற்றுக்கு அருகில் இலுப்பை கிராமத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் படித்து வந்தனர். எங்கள் ஊரில் இருந்து ஒரு கி.மீட்டர் துாரத்தில் அந்த பள்ளி உள்ளது. பாலாற்று தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டு போக்கு வரத்து துண்டிக்கப்பட்டதும், மாணவ மாணவியர் 15 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே போல் அந்த பகுதி மக்கள் பெரும்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு விவசாய பணிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது.
தரைப்பாலம் உடைப்பால் இலுப்பை, செய்யனுார்பேட்டை, புதுார், சித்தனகால், புத்தனுார், நாட்டேரி, பிரமதேசம் போன்ற பகுதி மக்கள் காஞ்சிபுரம் செல்வதற்கு நீண்ட துாரம் சுற்றி சென்றனர்.உடைந்த தரைப்பாலத்தை ஏற்கனவே இருந்த அளவை விட சற்று உயரமாக கட்ட வேண்டும்.எதிர்காலத்தில் இது போன்று பிரச்னை ஏற்படக்கூடாது என கோரிக்கை வைத்தோம். போக்குவரத்துக்காக தற்காலிகமாக கல் மண்ணை கொட்டி சாலை அமைத்தனர். வரும் அக்டோபர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழைக்கு பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டால் இந்த தற்காலிக சாலை தாங்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.