சென்னை-பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை, ஐந்து மாதங்களில் மட்டும் லிட்டருக்கு, 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த, எள், நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்கள் மீது விதிக்கப்படும், 1 சதவீத, 'செஸ்' எனப்படும் கூடுதல் வரியை ரத்து செய்யு மாறு, தமிழக அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு தயாரிப்பு
தமிழகத்தில் சமையலுக்கு பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், 'ரீபைன்ட் ரைஸ்பர்ன் ஆயில்'ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, கடலை எண்ணெய், நல்லெண்ணெய் பயன்பாடு அதிகம் இருந்தது.புதிய பொருளாதார கொள்கையின் தாராளமயமாக்கலால், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியால், அவற்றின் பயன்பாடு அதிகரித்தது. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்க்கு தேவைப்படும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, இந்தியாவில் மிகவும் குறைவு.இந்தோனேஷியா, மலேஷியா நாடுகளில் இருந்து பாமாயில் இறக்கு மதி செய்யப்படுகிறது.
ரஷ்யா, உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்; அர்ஜென்டினா, பிரேசிலில் இருந்து சோயா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.உள்நாட்டில், சூரியகாந்தி எண்ணெய் விற்பனையில், மிக பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவை வாடிக்கையாளர்களை ஈர்க்க, அதிக விளம்பரங்கள் செய்கின்றன. இதனால், மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சூரியகாந்தி எண்ணெய் பயன்பாடு அதிகம் உள்ளது.இந்தியாவுக்கு உக்ரைனில் இருந்து ஆண்டுக்கு, 190 கோடி லிட்டரும்; ரஷ்யாவில் இருந்து, 50 கோடி லிட்டரும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையில் பிப்ரவரியில் போர் ஏற்பட்டது.அதனால், உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவில் இருந்து குறைவாக வருகிறது. இதையடுத்து, ஜனவரியில் இருந்து இம்மாதம், 20ம் தேதி வரை, சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு, 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.போர் காரணமாக பல நாடுகளில் பாமாயில் தேவை அதிகரித்ததால், சர்வதேச சந்தையில், அதன் விலை உயர்ந்தது.
எனவே, இந்தோனேஷியா தன் நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் என்று கருதி, ஏப்., இறுதியில் பாமாயில் ஏற்று மதிக்கு தடை விதித்தது. இதனால், பாமாயில் விலையும் ஐந்து மாதங்களில் லிட்டருக்கு, 35 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.சர்வதேச நிலவரங் களால், சூரியகாந்தி எண்ணெய் விலை அடிக்கடி உயர்வதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலரும் உள்நாட்டு தயாரிப்பான கடலை எண்ணெய், நல்லெண்ணெய் வாங்க, மீண்டும் முக்கியத்துவம் தருகின்றனர்.
இதுகுறித்து, மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சங்க முன்னாள் செயலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வரை, கடலை எண்ணெய் தான் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. மத்திய அரசு, அனைத்து சமையல் எண்ணெய் வகைகளுக்கும், 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., விதித்துள்ளது.நல்லெண்ணெய் உற்பத்திக்கு தேவையான எள், கடலை எண்ணெய் உற்பத்திக்கு தேவையான நிலக்கடலை ஆகியவற்றின் மீது, தமிழக அரசு வேளாண் விளைபொருள் மார்கெட்டிங் கமிட்டி தலா, 1 சதவீதம், கூடுதல் வரி விதிக்கிறது.

'செஸ்' வரி
உதாரணமாக வியாபாரி கள், 1,000 கிலோ எள் வாங்கினால், அதற்கான மொத்த தொகைக்கு, 1 சதவீதம் செஸ் செலுத்த வேண்டும். இந்த செஸ் விதிப்பு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கிடையாது. தமிழக அரசு, 1 சதவீதம் செஸ் விதிப்பதை ரத்து செய்தால், நிலக்கடலை, எள் எண்ணெய் வித்துக்கள் வாங்கும் செலவு குறையும்.பல மாநிலங்களில் விரை வில், நிலக்கடலை, எள் அறுவடை துவங்க உள்ளது.
இந்த சமயத்தில், மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது போல, எள், நிலக்கடலை ஏற்றுமதிக்கும் குறைந்தது மூன்று, நான்கு மாதங்கள் தடை விதிக்க வேண்டும்.இதனால், எள், நிலக்கடலையை முழுதும் பயன்படுத்தி, அதிக கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உற்பத்தி செய்யலாம். அவற்றின் விலை மேலும் குறையும். மக்கள், சூரியகாந்தி எண்ணெய் வாங்குவதை குறைத்து, கடலை எண்ணெய், நல்லெண்ணெய் அதிகம் வாங்குவர்.விற்பனை சரிவை ஈடுசெய்ய, சூரியகாந்தி எண்ணெய் விற்கும் நிறுவனங்கள் விலையை குறைக்க முன்வரும். இதனால், ஒட்டு மொத்தமாக சமையல் எண்ணெய் விலை குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
நம் நாட்டில் அனைத்து வகை சமையல் எண்ணெய் தேவை ஆண்டுக்கு, 2,500 கோடி கிலோ. அதில் உள்நாட்டு உற்பத்தியின் பங்கு, 1,200 கோடி கிலோ. மீதி, 1,300 கோடி கிலோ இறக்குமதி செய்யப்படுகிறது.மொத்த இறக்குமதியில் பாமாயில் பங்கு, 54 சதவீதம்; சோயா எண்ணெய், 25 சதவீதம்; சூரிய காந்தி எண்ணெய், 19 சதவீதம்; சோளம் உள்ளிட்ட இதர வகை எண்ணெய்களின் பங்கு, 2 சதவீதம்.
உக்ரைன் - ரஷ்யா போர் துவங்குவதற்கு முன், ஜனவரியில் தமிழகத்தில், லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், 140 ரூபாய் - 150 ரூபாய்க்கு விற்றது. இம்மாதம் அதன் விலை, 185 ரூபாய் - 190 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐந்து மாதங்களில் மட்டும் சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு, 45 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது ஜனவரியில் லிட்டர் பாமாயில் விலை, 115 ரூபாய் - 120 ரூபாயாக இருந்தது. இம்மாதம், 150 ரூபாய் - 155 ரூபாயாக அதிகரித்துள்ளது கொரோனா தொற்றுக்கு முன், 2020 துவக்கத்தில் லிட்டர் பாமாயில், 80 ரூபாய்க்கும்; சூரியகாந்தி எண்ணெய், 95 ரூபாய்க்கும் விற்பனையாகின. இரு ஆண்டுகளில் மட்டும், அவற்றின் விலை இரு மடங்கை தாண்டியுள்ளது நடப்பாண்டு ஏப்., 20ம் தேதி, 186 ரூபாய்க்கு விற்ற லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை, ஒரு மாதத்தில் ஐந்து ரூபாய் உயர்ந்து, தற்போது, 191 ரூபாயாக உள்ளது. இதே காலத்தில் பாமாயில், 153 ரூபாயாயில் இருந்து, 157 ரூபாயாக உயர்ந்துள்ளது தொடர்ந்து கடலை எண்ணெய் லிட்டர் விலை, 180 ரூபாய் - 190 ரூபாய்; நல்லெண்ணெய், 230 ரூபாய் -250 ரூபாயாக உள்ளது இந்தோனேஷியா, பாமாயில் ஏற்றுமதி மீதான தடையை ஜூன் முதல் நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், வரும் நாட்களில் பாமாயில் விலை லிட்டருக்கு, 5 ரூபாய் வரை குறையலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE