சென்னை : சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும், 281 பள்ளிகளில், 50 பள்ளிகள், 'சிட்டிஸ்' மற்றும் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் மீதமுள்ள, 231 பள்ளிகளை தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியில் மேம்படுத்த, 1,500 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, வகுப்பறைகளை நவீனப்படுத்துவதுடன், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் ஆண்டுக்கு, 1.50 லட்சம் பேர் படிக்க வசதி உள்ளது. தனியார் பள்ளிகள் அதிகரிப்பு, அதன் மீது பெற்றோர்களின் மோகம் காரணமாக, மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கை குறைந்தது. கடந்த 2019ம் ஆண்டு வரை, 90 ஆயிரம் பேர் என்ற அளவில் தான் மாணவ - மாணவியர் படித்தனர்.
கொரோனா பாதிப்பால், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர், தங்கள் பிள்ளைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினர். இதையடுத்து, தற்போது மாணவர் எண்ணிக்கை, 1.10 லட்சமாக உயர்ந்துள்ளது.இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, சுவர்களில் வண்ண ஓவியம் என, மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் உற்சாகமடைந்த மாநகராட்சி, உலக தரத்தில் வகுப்பறைகளை உருவாக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு நிதி உதவியுடன் 'சிட்டிஸ்' திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டத்தில், 95 கோடி ரூபாயில், 28 பள்ளிகள் 'மார்டன்' எனப்படும், நவீன வகுப்பறையாக மாற்றப்படுகின்றன. இதில், டிஜிட்டல் முறையில் கல்வி, நவீன ஆய்வகம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, விளையாட்டு வசதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதைத் தவிர, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில், 50 கோடி ரூபாயில், 22 பள்ளிகள் நவீன வகுப்பறையாக மாற்றப்பட்டு வருகின்றன. மேஜை, நாற்காலி வசதிக்கு, சென்னை 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனம், 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இந்த, 50 பள்ளிகள் இந்தாண்டு இறுதிக்குள் நவீன வகுப்பறையாக பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்நிலையில், மீதமுள்ள பள்ளிகளை மேம்படுத்த மாநகராட்சி வசம் போதிய நிதி இல்லாத காரணத்தால், தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியை பெற, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பிரான்ஸ் நாட்டு துாதரகம் சார்பில், அந்நாட்டில் உள்ள ஏழு நிறுவன அதிகாரிகளுடன், மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.அப்போது, 'சிட்டிஸ்' திட்டத்தில் செயல்பட்டு வரும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் விளக்கினர். சி.எஸ்.ஆர்., எனப்படும், தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியில், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த உதவுமாறு கோரிக்கை வைத்தனர். அவர்களும், நிதி வழங்க முன்வந்துள்ளனர்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி பள்ளிகளை, 1,500 கோடி ரூபாயில் மேம்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள, 281 பள்ளிகளில், 50 பள்ளிகள், 155 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள, 231 பள்ளிகளை, 1,500 கோடி ரூபாயில் மேம்படுத்த உள்ளதால், தனியார் பள்ளிகளுக்கு ஈடாக, மாநகராட்சி பள்ளிகள் தரம் உயரும்; மாணவர் சேர்க்கை, 1.50 லட்சத்தை எட்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
'சிட்டிஸ்' மற்றும் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில், 50 பள்ளிகளை மேம்படுத்தும் பணி, விரைவில் முடிய உள்ளது. அடுத்தகட்டமாக, 231 பள்ளிகளை மேம்படுத்த, 1,500 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டது. விரைவில் சி.எஸ்.ஆர்., நிதி கிடைத்துவிடும். மொத்த கட்டமைப்புகளும் மேம்படுத்தும் போது, மாணவ, மாணவியருக்கு தரமான வகுப்பறைகள், உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும்.
- மாநகராட்சி அதிகாரிகள்
'சிட்டிஸ்' மற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் முதல்கட்டமாக, 50 பள்ளிகளை, 155 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணி நடக்கிறது. 2வது மற்றும் 3வது கட்ட பணிகள், 1,500 கோடி ரூபாயில் நடைபெற உள்ளன. இதில், 50 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி. மீதமுள்ள தொகை, சி.எஸ்.ஆர்., நிதி. இந்த நிதியில் கட்டடங்கள் மேம்படுத்த, 71.57 கோடி ரூபாய்; டிஜிட்டல் கட்டமைப்புக்கு, 15.11 கோடி ரூபாய்; தொடக்க நிலை கல்விக்கு, 6.46 கோடி ரூபாய்; ஆசிரியர்கள் திறன் மேம்படுத்த, 5.56 கோடி ரூபாய்; விளையாட்டு மற்றும் கல்விசாராத பணிக்கு, 3.49 கோடி ரூபாய் ஒதுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
மூன்றாம் கட்ட பணி, 1,398 கோடி ரூபாயில் நடைபெற உள்ளது. இதில், கட்டடங்கள் மேம்படுத்த, 1,035.62 கோடி ரூபாய்; டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு, 255.01 கோடி ரூபாய்; தொடக்க நிலை கல்விக்கு, 4.12 கோடி ரூபாய்; ஆசிரியர்கள் திறன் மேம்படுத்த, 19.44 கோடி ரூபாய்; விளையாட்டு மற்றும் கல்விசாரா பணிக்கு, 83.81 கோடி ரூபாய் ஒதுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள்
'சிட்டிஸ்' மற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் முதல்கட்டமாக, 50 பள்ளிகளை, 155 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணி நடக்கிறது. 2வது மற்றும் 3வது கட்ட பணிகள், 1,500 கோடி ரூபாயில் நடைபெற உள்ளன. இதில், 50 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி. மீதமுள்ள தொகை, சி.எஸ்.ஆர்., நிதி. இந்த நிதியில் கட்டடங்கள் மேம்படுத்த, 71.57 கோடி ரூபாய்; டிஜிட்டல் கட்டமைப்புக்கு, 15.11 கோடி ரூபாய்; தொடக்க நிலை கல்விக்கு, 6.46 கோடி ரூபாய்; ஆசிரியர்கள் திறன் மேம்படுத்த, 5.56 கோடி ரூபாய்; விளையாட்டு மற்றும் கல்விசாராத பணிக்கு, 3.49 கோடி ரூபாய் ஒதுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.மூன்றாம் கட்ட பணி, 1,398 கோடி ரூபாயில் நடைபெற உள்ளது. இதில், கட்டடங்கள் மேம்படுத்த, 1,035.62 கோடி ரூபாய்; டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு, 255.01 கோடி ரூபாய்; தொடக்க நிலை கல்விக்கு, 4.12 கோடி ரூபாய்; ஆசிரியர்கள் திறன் மேம்படுத்த, 19.44 கோடி ரூபாய்; விளையாட்டு மற்றும் கல்விசாரா பணிக்கு, 83.81 கோடி ரூபாய் ஒதுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE