வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
வி.செந்தாமரை குமரன், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளிகள், நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கு, 1998ல் துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம். இவர்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்காமல், 11 ஆண்டுகளுக்கு மேலாக ஜனாதிபதி காலம் தாழ்த்தியதாக கூறி, குற்றவாளிகளை துாக்கிலிட தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். அத்துடன் நிற்கவில்லை; இவர்களது துாக்குத் தண்டனையையும், 2014ல், ஆயுள் தண்டனையாக குறைத்து விட்டது உச்ச நீதிமன்றம்.
இன்று தங்களுக்கு அதிகாரம் தரக்கூடிய, இந்திய அரசியல் சட்டத்தின், 142வது பிரிவை பயன்படுத்தி, முக்கிய குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது அதே உச்ச நீதிமன்றம். இவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு என்னவென்றால், ராஜிவை கொல்ல மனிதவெடிகுண்டாக செயல்பட்ட விடுதலை புலி தனுவின், இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டுக்கான, 'பேட்டரி'யை வாங்கிக் கொடுத்தார் என்பது... எந்த உச்ச நீதிமன்றம் இவரை குற்றவாளி என தீர்ப்பளித்து துாக்கு தண்டனை விதித்ததோ அதே நீதிமன்றம் தான், விடுதலையும் செய்திருக்கிறது. இது, சாதாரண நிகழ்வு அல்ல; சாதனையே!
இல்லையெனில், ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையானதும் முதல்வரை உடனே, அன்றைய தினமே சந்திக்க முடியுமா? சந்திக்கச் செல்லும் போது தமிழக அரசின் முதன்மைச் செயலர், 'பேரறிவாளருக்கு' கை கொடுத்து வாழ்த்தி, முதல்வர் ஸ்டாலினிடம் அழைத்துச் செல்கிறார். அவரோ ஆரத்தழுவி, அருகில் அமரச் செய்து வாழ்த்தி உள்ளம் பூரிக்கிறார். இத்தருணத்தை, 'டிவி' சேனல்கள் அனைத்தும் 'லைவ்' செய்கின்றன. இவ்வளவு மரியாதை கிடைப்பதற்கு, பேரறிவாளன் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்க வேண்டும்!

அதைப்பாராட்டி, தமிழகத்திலுள்ள பல்கலைகள் அவருக்கு டாக்டர் பட்டத்தை உடனே வழங்கிடலாம். இப்படியொரு வாய்ப்பு, எந்த பல்கலைக்கும் இனி கிடைக்காது. ஒரு தமிழனுக்கு பட்டம் வழங்கிட... அதுவும் ராஜிவ் கொலை வழக்கில், தமிழக அரசின் பேராதரவுடன் விடுதலையான குற்றவாளிக்கு பட்டம் வழங்கிட, வருங்காலத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.
ஆகவே பல்கலைகளே... பட்டம் வழங்கிட தயாராகுங்க... இந்தியாவில் அதிக டாக்டர் பட்டம் வாங்கிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை காட்டிலும், பேரறிவாளனுக்கு வழங்கிட வேண்டும்; 31 ஆண்டுகள் சிறையில் இருந்து தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். சினிமாக்காரர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கொண்டிருக்காமல் இவரைப் போன்ற, 'தியாகி'க்கு வழங்கி பெருமை சேர்த்துக் கொள்ளுங்கள். காலம் தாழ்த்தினால்... வேறு யாராவது முந்திக்கொள்வர்... போங்கள், சீக்கிரமே போய் வழங்குங்கள்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE