சென்னை,----அக்னி நட்சத்திரத்தின் உச்ச கட்டமாக, சென்னையில் நேற்று, 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், நேற்று அக்னி நட்சத்திர வெயில் உக்கிரம் காட்டியது. அதிகபட்சமாக சென்னையில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் தகித்தது.
தீவிரம்
அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களிலும் இந்த வெப்பநிலை பதிவானது.திருத்தணி, வேலுார், கடலுார், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை, 39; திருச்சி, புதுச்சேரி, 38 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இந்த இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி, வெயில் வாட்டி எடுத்துள்ளது.குறைந்தபட்சமாக கொடைக்கானலில், 19; குன்னுாரில், 23 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.அக்னி நட்சத்திர காலம், 28ம் தேதி முடிய உள்ள நிலையில், இறுதி கட்டமாக, மாநிலம் முழுதும், கோடை வெயில் மீண்டும் தீவிரம் காட்டிஉள்ளது.
எச்சரிக்கை
இன்றும், நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், வெப்ப சலனத்தால் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில், 100 டிகிரி பாரன்ஹீட்டான, 38 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெயில் பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால், அங்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, கோவை சின்கோனா, வால்பாறை, 3; சோலையார், அவலாஞ்சி, மேல் கூடலுார், 2; அரிமளம், நீலகிரி பார்வூட், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.