சென்னை,-சென்னை எண்ணுார் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையத்தில் இருந்து, கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு எரிவாயு எடுத்து செல்லும், 'பைப் லைன்' எனப்படும் குழாய் வழித்தடத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுதினம் துவக்கி வைக்கிறார்.
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், எண்ணுாரில் எல்.என்.ஜி., எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையத்தை அமைத்துள்ளது. அந்த முனையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலையில் இயற்கை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.திரவ நிலை எரிவாயு, வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் பி.என்.ஜி., என்ற பெயரில், 'பைப்டு நேச்சுரல் காஸ்' என்றும்; வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு என்றும் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த எரிவாயு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில்லை. பெட்ரோல், டீசல் எரிபொருளை விட செலவும், 50 சதவீதம் குறைவு. தற்போது, எண்ணுார் எல்.என்.ஜி., முனையத்தில் இருந்து, குழாய் வழித்தடத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில தொழிற்சாலைகளுக்கு, இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.மேலும், சென்னையில் சில பெட்ரோல் 'பங்க்'குகளில் உள்ள சி.என்.ஜி., முனையங்கள் வாயிலாக, வாகனங்களுக்கு எரிவாயு வழங்கப்படுகிறது.
எண்ணுார் எல்.என்.ஜி., முனையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு இயற்கை எரிவாயு எடுத்து செல்வதற்கு, சென்னை - திருச்சி - மதுரை - ராமநாதபுரம் - துாத்துக்குடி இடையில், குழாய் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இது தவிர, எண்ணுார் முனையத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள பெங்களூருக்கு, இயற்கை எரிவாயு எடுத்து செல்ல, 1,760 கோடி ரூபாய் செலவில் குழாய் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தட பணிகள் முடிவடைந்து விட்டன.இதையடுத்து, சென்னைக்கு, 26ம் தேதி வரும் பிரதமர் நரேந்திர மோடி, எண்ணுார் - பெங்களூரு இடையில் அமைக்கப்பட்டுள்ள, இயற்கை எரிவாயு குழாய் வழித்தடத்தை துவக்கி வைக்க உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE