சென்னை : விளைச்சல் அதிகரிப்பால் பெரிய வெங்காயம் விலை குறைந்துள்ளது.மஹாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகளவில் விளைகிறது.இங்கிருந்து பல்வேறு மாநிலங்களின் தேவைக்கு அவை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கப்பலில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.தற்போது, புதிய வெங்காய சாகுபடி நடந்து வருகிறது. ஏற்கனவே, அறுவடை செய்யப்பட்ட வெங்காயம், பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இவற்றின் கையிருப்பு அதிகளவில் உள்ளது. புதிய வெங்காய அறுவடை துவங்கவுள்ள நிலையில், கையிருப்பில் உள்ள வெங்காயத்தை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சந்தைகளுக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு, நாள்தோறும் 100 லாரிகளில் பெரிய வெங்காய வரத்து உள்ளது. இதனால், அவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், ஒரு கிலோ 35 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட முதல் தர வெங்காயம், தற்போது, 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தர வெங்காயம், எட்டு முதல் 12 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.