விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சியில் சொத்து வரி, காலிமனை வரி பொது சீராய்வு தொடர்பாக, நகர்மன்ற அவசர கூட்டம், நேற்றுமாலை நடந்தது.சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். துணை சேர்மன் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தார். கமிஷனர் சசிகலா வரவேற்றார்.
கூட்டத்தில், வரி உயர்வு தொடர்பான ஒரே ஒரு மன்றப்பொருள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.அ.தி.மு.க., கவுன்சிலர் சந்திரகுமார், 'மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரி உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., வெளிநடப்பு செய்கிறது' என்றதும், அக்கட்சி கவுன்சிலர்கள் அனைவரும் அரங்கை விட்டு வெளியேறினர்.பா.ம.க., சிங்காரவேல், 'கவுன்சிலர்கள் இல்லாமல் 4 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை.
தற்போது, கந்துவட்டிக்காரர்கள்போல வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டி உள்ளது. மக்களை பாதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என்ற கவுன்சிலர்கள் கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துக்கூற வேண்டும்' என்றார்.தொடர்ந்து, தே.மு.தி.க., ராஜ்குமார், பா.ம.க., குணசுந்தரி, குமாரி ஆகியோர், 'வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால், வீதிகள் தோறும் குப்பைகள் தேங்கி, மக்களிடம் பதில் கூற முடியவில்லை' என்றனர்.பதிலளித்து சேர்மன் சங்கவி முருகதாஸ் பேசுகையில், 'பதினைந்து நாட்களுக்குள் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக 50 பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.தே.மு.தி.க., ராஜ்குமார், 'நிதி பற்றாக்குறையில் நகராட்சி தவிக்கும் நிலையில், பெரியார் நகர், பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கடைகளை வாடகைக்கு விட வேண்டும்.
அதுபோல், பஸ் நிலைய கழிவறையை வாடகைக்கு விட வேண்டும். வருவாய் இனங்களை கண்டறிந்து, அதனை பெருக்க வேண்டும்' என்றார்.தி.மு.க., அன்பழகன், 'வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுத்து, அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால், அந்த கடைகள் வழக்கம்போல இயங்கி வருவதற்கு காரணம் என்ன' என்றார்.பா.ம.க., குமாரி முருகன் பேசுகையில், '10 ஆண்டுகளாக தாயில்லா பிள்ளை போல இருந்த நகராட்சிக்கு அம்மாவாக சேர்மன் கிடைத்துள்ளீர்கள். புண்ணிய நதியான மணிமுக்தாற்றில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆற்றை சுத்தம் செய்தால், அந்த விருத்தகிரீஸ்வரருக்கே நீங்கள் தான் அம்மாவாக இருப்பீர்கள்' என்றார்.இதற்கு, தி.மு.க., கவுன்சிலர்கள் அன்பழகன், பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், 'நகர்மன்ற அரங்கில் அம்மா என்ற வார்த்தை வேண்டாம். தாய் என்பதை ஏற்கிறோம்' என்றனர்.அதற்கு, அம்மா இல்லாமல் யாரும் இல்லை. அந்த வார்த்தையை எதற்காக எதிர்க்கிறீர்கள் எனக் கேட்டு, பா.ம.க., கவுன்சிலர்கள் அனைவரும், அம்மா, அம்மா என கோஷமிட்டனர்.இதனால், நகர்மன்ற அரங்கில் சிறிது நேரம் கலகலப்புடன், பரபரப்பும் நிலவியது. தொடர்ந்து, மாலை 5:20 மணிக்கு மேல் வரை, கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்னைகளை சுட்டிக்காட்டி பேசினர்.
மைக் பிராப்ளம்
கவுன்சிலர்கள் இருக்கை முன் இருந்த பெரும்பாலான மைக்குகள் பழுது காரணமாக அகற்றப்பட்டிருந்தன. இதனால் வார்டு குறைகளை தெரிவிக்க முடியாமல் கவுன்சிலர்கள் சிரமமடைந்தனர். அப்போது, மைக்குகள் எண்ணிக்கை குறித்து, தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நகைச்சுவையாக வாக்குவாதம் செய்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE