நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகரமன்ற அவசரக் கூட்டம் சேர்மன் ஜெயந்தி தலைமையில் நடந்தது.துணை சேர்மன் கிரிஜா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கமிஷனர் பார்த்தசாரதி கூறும்போது, 'கடந்த மாதம் 11ம் தேதி நடந்த நகரமன்ற கூட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி சொத்துவரி உயர்வுக்கான தீர்மானம் நிறைவேறியது.
இதற்கு பொதுமக்களிடம் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என விளம்பரம் செய்தோம். ஆனால், யாரும் ஆட்சேபனை செய்யவில்லை' என்றார்.'மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வரி உயர்வு அவசியமானதாக இருப்பதால் ஒத்துழைப்பு தர வேண்டும்' என, சேர்மன் ஜெயந்தி கேட்டுக் கொண்டார். அதையேற்று, வரி உயர்வு அமலுக்கு வந்ததாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.'அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் சிரமப்படும் நிலையில் வரி உயர்வு கண்டிக்கத்தக்கது' எனக் கூறி அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதவதி வெளிநடப்பு செய்தார். வரி உயர்வை கண்காணிக்க வேண்டிய வருவாய் ஆய்வாளர் பணியிடமே காலியாக உள்ளது;
நகராட்சியில் உள்ள கழிவறையையே சுத்தமாக வைத்து கொள்ள முடியாத அதிகாரிகள் எப்படி ஊரை சுத்தமாக வைத்து கொள்வார்கள் என கவுன்சிலர் முத்தமிழன் கேள்வி எழுப்பினார்.நகராட்சி மருத்துவமனையில் கழிவறை வசதி இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுவதாக, கவுன்சிலர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவரையுமே மாற்றம் செய்தால்தான் பணிகள் நடக்கும் என இக்பால் கூறினார்.கவுன்சிலர்கள் தெரிவித்த பிரச்னைகள் உடனடியாக சரி செய்யப்படும் என சேர்மன் ஜெயந்தி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE