வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவை கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்க கட்சிக்குள் கோரிக்கை வலுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம், கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் இருந்து 57 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10ல் தேர்தல் நடக்கிறது. கர்நாடகாவில் நான்கு ராஜ்யசபா இடங்கள் காலியாகின்றன. இதில், சோனியாவின் மகளும், கட்சியின் பொது செயலருமான பிரியங்காவை போட்டியின்றி தேர்வு செய்ய, கர்நாடக மாநில காங்., தலைவர் டி.கே.சிவகுமார் கோரிக்கை விடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, தொலைபேசி வாயிலாகவும், ராஜஸ்தானில் நடந்த காங்., சிந்தனையாளர்கள் கூட்டத்திலும் அவர் சோனியாவிடம் வலியுறுத்தியதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த கோரிக்கையை பிரியங்கா நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே குடும்பத்தில் மூவரும் எம்.பி., பதவி வகிப்பது, பா.ஜ.,வின் குடும்ப அரசியல் பிரசாரத்திற்கு மேலும் வலு சேர்த்துவிடும் என்பதால் சோனியாவும் தயங்குவதாக கூறப்படுகிறது.
ஆனாலும் இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பாக கட்சி தலைமை முடிவெடுக்கும் என காங்., தலைவர்கள் தெரிவித்தனர். அதே நேரம், கர்நாடகாவில் இருந்து மூன்று வேட்பாளர்களை அறிவிக்க இருந்த பா.ஜ., தற்போது நான்கு பெயர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-புதுடில்லி நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE