ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை காரணமாக வைத்து, பா.ஜ.,வின் முக்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம், அக்கட்சிக்கு நெருக்கடி தரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தே.ஜ., கூட்டணியில் இருந்த சிவசேனா, சிரோன்மணி அகாலிதளம் போன்ற முக்கிய கட்சிகள் விலகிச் சென்றுவிட்ட நிலையில், இக்கூட்டணியில் பா.ஜ., ஆதரவுடன் இருக்கும் ஒரே ஒரு பெரிய கட்சி, ஐக்கிய ஜனதா தளம் மட்டுமே.பீஹாரில், இந்த இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.
தங்களிடம் அதிக எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், முதல்வர் பதவி நமக்கில்லையே என்ற வருத்தம் பா.ஜ.,வுக்கு இருக்கிறது. இதையடுத்து, தற்போது நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தல் வாயிலாக நிதிஷ்குமாரை எம்.பி., யாக்கி, டில்லி அரசியலுக்கு அனுப்பி வைக்க, பா.ஜ., விரும்புவதாக செய்திகள் வெளியாகின.இது, நிதிஷ்குமாரை கடும் கோபத்திற்கும், அதிருப்திக்கும் ஆளாக்கிஉள்ளது.
திடீர் நெருக்கம்
இவ்விஷயத்தில், டில்லி பா.ஜ., தலைவர்கள் அமைதி காத்தாலும், பீஹார் பா.ஜ., தலைவர்கள் தொடர்ச்சியாக பேசி வருவது, இரு கட்சிகளுக்கும் இடையே உரசலையும், மோதலையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. இதில், நுாலிழை பெரும்பான்மையில் இருக்கும் பா.ஜ.,வுக்கு, தன் தயவை உணர்த்த நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார்.
இதனால் தான், பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென, வட கிழக்கு மாநிலமான அசாமின் பா.ஜ., முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசியது பற்றி கருத்து கேட்ட போது, 'நான்சென்ஸ்' என வெடித்ததுடன், 'பீஹாரில் அதுபோல நடக்காது' என நிதிஷ்குமார் கூறினார்.அதேபோல, பீஹார் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்று வதற்கும் நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதுவும், பா.ஜ., அமைச்சர்கள் மற்றும் அம்மாநில பா.ஜ.,வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.மேலும், 'இப்தார்' விருந்து நிகழ்ச்சியை காரணமாக வைத்து, எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவுடன், நிதிஷ்குமார் திடீர் நெருக்கம் காட்டத் துவங்கினார். இதுவும், மாநில பா.ஜ.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் தான், பா.ஜ.,வை வெறுப்பேற்ற நிதிஷ்குமார் மற்றொரு குண்டை வீசியுள்ளார். பீஹார் அரசியலில், மிகவும் உணர்வு பூர்வமான பிரச்னையாக இருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.
அனைத்துக் கட்சி
கடந்த ஆண்டு இதே பிரச்னைக்காக, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் நிதிஷ்குமார் அழைத்துச் சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பின் அமைதியாகிவிட்ட நிதிஷ்குமாரை, கடந்த வாரம் இப்பிரச்னைக்காக தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசினார். அப்போதே, இந்த சந்திப்பு சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில், நேற்று இது குறித்து நிதிஷ்குமார் கூறியதாவது:ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆலோசிக்கவும், ஒவ்வொரு கட்சிகளின் கருத்துக்களை கேட்கவும், அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும். அதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து, அமைச்சரவை முன்பு சமர்ப்பிக்கப்படும். சில கட்சிகளிடம் பேசியபோது, 27ம் தேதி, அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தலாம் என தெரிவித்துள்ளன. இருப்பினும், வேறு கட்சிகளின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.சில கட்சிகள், இவ்விஷயத்தில் ஒப்புதல் இல்லாமல் உள்ளன. எனவே தான், ஒவ்வொரு கட்சியுடனும் பேசி வருகிறோம். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து முடிந்த பின், அமைச்சரவை எடுக்கும் இறுதி முடிவுக்கு பின், அனைத்து பணிகளையும் துவக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது பற்றி, முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து, பா.ஜ., தலைவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இவ்விஷயத்தில் விரைவில் முடிவெடுத்து அறிவிப்போம்.
![]()
|
ஜாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்., என பீஹாரின் முக்கிய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நிற்கின்றன. அதேசமயம், முன்னாள் துணை முதல்வர் சுசில்குமார் மோடியைத் தவிர, அம்மாநில பா.ஜ., தலைவர்கள் எவருமே, வெளிப்படையாக ஆதரவு தெரிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி, பீஹார் சட்டசபையிலும், சட்ட மேலவையிலும், ஏற்கனவே இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், அனைத்துக் கட்சிக் கூட்டம் மீண்டும் கூட்டப்படவுள்ளது. இதில் பங்கேற்பதை இம்முறை பா.ஜ., தவிர்க்கும் என கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE