புதுச்சேரி : புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்திரகலா சங்கீத் விஸ்வ வித்யாலயா நுண்கலை பல்கலைக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. சட்டசபை அலுவலகத்தில், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., பாஸ்கர், இந்திரகலா சங்கீத் விஸ்வ வித்யாலயா பல்கலைக் கழக துணைவேந்தர் மோக் ஷதா சந்தராகர், கலை பண்பாட்டு துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் கந்தன், பல்கலைக்கூட முதல்வர் போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் ஒருங்கிணைந்து நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் தங்களது திறமைகளை மெருகூட்டிக் கொண்டு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பினை பெற முடியும். இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையே திறமைகளை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.பாரம்பரிய கலைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. பாரதியார் பல்கலைக் கூட மாணவர்கள் தங்களது உயர் பட்டப்படிப்புகளை தேசிய பல்கலைக் கழகத்தில் தொடர முடியும்.இந்திரகலா சங்கீத பல்கலை.,யில் நடத்தப்படும் புதிய டிப்ளமோ, பட்டய படிப்புகளை பாரதியார் பல்லைக் கழகத்தில் துவக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

முதல்வர் ரங்கசாமி கூறுகையில் ' பாரதியார் பல்கலை கூடத்திற்கு தேவையான நிதி ஒதுக்கி புதிய கட்டட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். மின் துறை தனியார்மயம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளிக்காமல் புறப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE