கோவை;''ஓராண்டில் இரு முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது; தமிழக அரசு குறைக்க மறுப்பது ஏன்,'' என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பெட்ரோல், டீசல், காஸ் விலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று குறைத்திருக்கிறார், இது, பெரும் பலனை தராது என்றாலும், நல்லதொரு முன்னெடுப்பு என்பதால் வரவேற்கிறோம்.
காஸ் விலையை குறைக்காதது ஏமாற்றம்.பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை தீர்மானிப்பதில் வெளிப்படை தன்மையை அமல்படுத்தினால், இந்திய பொருளாதாரம் எழுச்சி பெறுவதற்கும், முன்னேறிச் செல்வதற்கும் அடித்தளமாக அமையும். ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வந்தால் விலையை குறைக்க முடியும் என, மத்திய அரசு கருதினால், ஜி.எஸ்.டி, கவுன்சிலை உடனடியாக கூட்டி, நிரந்தர தீர்வு காண வேண்டும்.
பெட்ரோலிய பொருட்கள் விலையை எண்ணெய் கம்பெனிகள் தீர்மானிக்கின்றன என, இதுவரை சொல்லி வந்த மத்திய அரசால், இப்போது விலையை நேரடியாக குறைக்க முடியும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. விலை நிர்ணயத்தை எண்ணெய் கம்பெனிகளின் அதிகாரத்துக்கு மீண்டும் விடாமல், மத்திய அரசே தீர்மானிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். ஓராண்டில் மத்திய அரசு இரு முறை விலையை குறைத்திருக்கிறது; தமிழக அரசு விலையை குறைக்காமல், மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருப்பது சுயாட்சியா; மாடல் ஆட்சியா? வாய்ச்சவடால் வேண்டாம்; விலையை குறையுங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE