தமிழக நிகழ்வுகள்:
விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகரில் 22 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும், சிறுவர்கள் மூன்று பேர் மீது விருதுநகர் இளஞ்சிறார் நீதிக்குழுமத்திலும் 806 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தாக்கல் செய்தனர்.இவ் வழக்கில் கைதான விருதுநகரைச் சேர்ந்த ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜீனத் அகமது ஆகியோர் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளனர். கைதான சிறுவர்கள் நான்கு பேர் ஜாமினில் வெளி வந்துள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கினர். 60 நாட்கள் ஆன நிலையில் நேற்று டி.எஸ்.பி. வினோதினி தலைமையிலான போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திற்கு இரும்பு பெட்டியில் 806 பக்க குற்றப்பத்திரிகையை கொண்டு வந்தனர். நீதிபதி கோபிநாத் முன்னிலையில் அதை தாக்கல் செய்தனர்.கைதான சிறுவர்கள் நான்கு பேரில் 15 வயது சிறுவனைப் பற்றி பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் கூறாததால் விடுவித்து அரசு தரப்பு சாட்சியாக்கினர். மற்ற 3 பேர் மீதும் 16 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர் இளஞ்சிறார் நீதி குழுமத்தில் நடக்கும் இந்த வழக்கில் அதே 806 பக்க குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் குமரேசன் தாக்கல் செய்தார்.பறிமுதல் செய்யப்பட்ட அலைபேசிகள் , இதர ஆவணங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கூடுதலாக 84 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 102 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.விரைவில் வழக்கு விசாரணை துவங்க உள்ளது.
இரு மகள்களுடன் தாய் தற்கொலை :குடும்ப பிரச்னையில் விபரீதம்
மேலுார், மதுரை மாவட்டம் மேலுார் சிட்டம்பட்டி அருகே முத்துப்பட்டியில் குடும்ப பிரச்னையில் இரு மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.மேலுார் முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 30. டீக்கடை ஊழியர். இவரது மனைவி நித்யா 25. இவர்களது மகள்கள் ரக் ஷனா 4, தர்ணிகாஸ்ரீ 2. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை கணவர் வேலைக்கு சென்ற நிலையில் அங்குள்ள தனியார் நிலத்தில் உள்ள 40 அடி ஆழ கிணற்றில் இரு மகள்களுடன் நித்யா குதித்து தற்கொலை செய்து கொண்டார்.மூவரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஆர்.டி.ஓ., பிர்தவுஸ் பாத்திமா, டி.எஸ்.பி.,பிரபாகரன் விசாரித்தனர்.
************************
இந்திய நிகழ்வுகள்
பஞ்சாயத்து தலைவரை கொன்ற'ஹைபிரிட்' பயங்கரவாதிகள் கைது
ஸ்ரீநகர் ஜம்மு - காஷ்மீரில், பஞ்சாயத்து தலைவரை சுட்டுக் கொன்ற, 'ஹைபிரிட்' எனப்படும் பகுதி நேர பயங்கரவாதியாக இருந்து, மீண்டும் சாமான்ய வாழ்க்கைக்கு திரும்பி விடும் மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில், உசன் கிராம பஞ்சாயத்து தலைவர் மன்சூர் அகமது பங்ரூ, கடந்த மாதம் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இது குறித்து, பாரமுல்லா காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் ரயீஸ் முகமது பட் கூறியதாவது:மன்சூர் அகமது பங்ரூவைக் கொன்ற மூன்று பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த மூவருக்கும், லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி அப்சலுக்கும் தொடர்பு உள்ளது. கொலைக்கு மூளையாக அப்சல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. அப்சல், சாமான்ய மக்களை மூளை சலவை செய்து, ஹைபிரிட் பயங்கரவாதிகளாக மாற்றியுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட மூவரும், ஹைபிரிட் பயங்கரவாதிகள். இவர்களுடைய பெயர் உளவுத் துறையிடம் இருக்கும் பயங்கரவாதிகள்பட்டியலில் இருக்காது. மக்களோடு மக்களாக வாழும் இவர்கள், தங்களுக்கு கொடுக்கப்படும் கட்டளைகளை நிறைவேற்றி விட்டு, சாமான்ய வாழ்க்கைக்கு திரும்பி விடுவர்.கைதான மூவரிடம் இருந்தும் சீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன. இவர்களை கைது செய்ததால், அடுத்து மேற்கொள்ளப்படவிருந்த பயங்கரவாத செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு கணவருக்கு இன்று தண்டனை
கொல்லம்:கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஸ்மயா தற்கொலை வழக்கில், இன்று குற்றவாளிக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொல்லத்தில், ஆயுர்வேத மருத்துவ மாணவியாக இருந்த விஸ்மயா, கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், வரதட்சணை கேட்டு கணவர் கிரண்குமார் தன்னை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறி, அவர் 'வாட்ஸ் ஆப்'பில் படங்களுடன் உறவினர்களுக்கு தகவல் அனுப்பிஇருந்தார். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, கிரண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில், கிரண்குமார் குற்றவாளி என, நேற்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது. வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு துாண்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு, 7 - 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்.இது குறித்து, விஸ்மயாவின் தந்தை கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்கு முன், விஸ்மயா திருமணத்தில், 100 சவரன் நகை, ஒரு நிலம், கார் ஆகியவற்றை வழங்கினேன்.கார் வேண்டாம், 10 லட்சம் ரூபாய் வேண்டும் எனக் கேட்டு, கிரண்குமார் என் மகளை கொடுமைப்படுத்தி, தற்கொலைக்கு துாண்டியுள்ளார். இப்போது, என் மகளுக்கு நீதி கிடைத்துள்ளது. புலனாய்வு அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
உலக நிகழ்வுகள்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கியதால் உயிரிழப்பு
மணிலா, பிலிப்பைன்சில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர்.தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் பொலிலியோ தீவில் இருந்து, ரியல் துறைமுகம் நோக்கி நேற்று ஒரு படகு சென்றது. அதில், 134 பயணியர் இருந்தனர். திடீரென படகின் இன்ஜினில் தீப்பற்றி, படகு முழுதும் பரவியது. தீயில் இருந்து தப்பிக்க, பயணியர் கடலில் குதித்தனர். ஆனால், தீயில் சிக்கிய ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கடலில் குதித்தவர்களில் 120 பேர் மீட்கப்பட்டனர். காணாமல் போனஏழு பேரை தேடும் பணி நடக்கிறது.
ரஷ்ய ராணுவ வீரருக்கு உக்ரைனில் ஆயுள் சிறை
கீவ் :போர்க்குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷ்ய ராணுவ வீரருக்கு உக்ரைனில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்து கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தப் போரில், ரஷ்ய ராணுவ வீரர் வாடிம் ஷிஷிமரின், 21, உக்ரைனை சேர்ந்த 62 வயது மூதாட்டியை சுட்டுக் கொன்றார். இதேபோல், உக்ரைன் நாட்டு பொதுமக்களில் ஒருவரை தலையில் சுட்டுக் கொலை செய்தார். இதையடுத்து, அவர் போர்க்குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நீதிபதிகள் குழு முன், ஷிஷிமரின் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 'மன அழுத்தத்தில் இருந்ததால் போர் விதிமுறைகளை மீறி இரண்டு பேரை கொலை செய்து விட்டதை ஒப்புக் கொண்ட ஷிஷிமரின், எந்த தண்டனை விதித்தாலும் ஏற்றுக் கொள்வதாக' கூறினார். போர்க் குற்றங்களுக்கான முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வாடிம் ஷிஷிமரினுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE