கோவை:பள்ளி செல்லப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியர் இருவர், மதுரை மாவட்டம் மேலுாரில் மீட்கப்பட்டனர்.திருப்பூரை சேர்ந்த பெற்றோருக்கு 16 மற்றும் 14 வயதுடைய இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 12ம் வகுப்பும், இளைய மகள் 10ம் வகுப்பும் படித்தனர். சிறுமியர் இருவரும், பள்ளிக்கு செல்வதிலும், படிப்பதிலும் ஆர்வமின்றி இருந்தனர்.சிறுமியரை கோவையில் இருக்கும் தன் சகோதரர் வீட்டில் தங்கி படிக்க தாயார் ஏற்பாடு செய்திருந்தார்.
நேற்று முன்தினம் சிறுமியர் இருவரும் மாயமாகி விட்டனர். திருச்சியை சேர்ந்த தோழி ஒருவருக்கு தப்பிய சிறுமி போனில் பேசியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் குறிப்பிட்ட அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, அந்த நபர் பஸ்சில் பயணிக்கும் முதியவர் என்பதும், அவரிடம் போன் வாங்கி சிறுமியர் பேசியதும் தெரியவந்தது. முதியவர் மூலம் பஸ் கண்டக்டரிடம் பேசிய போலீசார், சிறுமியரை அருகேயுள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கும்படி கூறினர்.அதன்படி அரசு பஸ் கண்டக்டர் முனியப்பன், டிரைவர் ஆண்டிசாமி இருவரும் சிறுமியரை, மதுரை மாவட்டம் மேலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு சென்ற கோவை மகளிர் போலீசார், சிறுமியரை மீட்டனர்.