சேலம்: அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சி.ஐ.டி.யு., கோரிக்கை விடுத்துள்ளது.
சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார், போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவின் விபரம்:போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு, மூன்றாண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் வருவதாக கூறி, 2.44 காரணி அடிப்படையிலேயே ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. எனவே, 14வது ஊதிய ஒப்பந்தத்தில் இக்குறைபாடுகளை சரி செய்யும் அடிப்படையில் பே மேட்ரிக்ஸ் உருவாக்கி சம்பள உயர்வு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிர் இலவச பயணத்துக்கு அரசு பஸ்சுக்கு நாளொன்றுக்கு, 5,600 ரூபாய் வழங்குகிறது. இதற்குரிய பேட்டாவை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.தன்னிச்சையாக மாற்றம் செய்யப்பட்டுள்ள இன்சென்டிவ் முறையை கை விட்டு, இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் விவாதித்து இன்சென்டிவ் திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும். போக்குவரத்துக்கழகங்களில் ஓய்வு பெற்ற, தொழிலாளர்களுக்கு, 2015 முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட வில்லை.
அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். 2020 மே மாதத்துக்கு பின் மரணமடைந்த, விருப்ப பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, 2016 ஊதிய ஒப்பந்த பலன்கள் அளிக்கப்பட்டு அனைவருக்கும் ஒரே கணக்கீட்டு அடிப்படையில் அகவிலைப்படி வழங்க வேண்டும். 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது முன் வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE