மதுரை: 'அண்ணனுக்கு பூரி செட், தோசை... பெப்பர் துாக்கலா ஆம்லேட் பார்சேல்... அடுத்து லைனுக்கு மீல்ஸ் வரட்டும்...' என கூவி 'சப்ளை' செய்யாத குறையாக, தமிழகத்திலேயே முதல் முறையாக, மதுரை புதுார் 'அம்மா' உணவகத்தை 'கவுன்சிலர்' உணவகமாக மாற்றி 'பக்கா கமர்ஷியல்' ஓட்டலாக இயக்குகிறார்,
14வது வார்டு தி.மு.க., கவுன்சிலரின் கணவர்.தமிழகத்தில் ஏழை, எளியோருக்கு மலிவு விலையில் உணவு வழங்க, 2013ல் அன்றைய முதல்வர் ஜெ., 'அம்மா' உணவகம் துவக்கினார். இதனால், தமிழகத்தில் உள்ள 700 அம்மா உணவகங்கள் மூலம், 12 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும்,

மதுரை, ஆரப்பாளையம், சுந்தரராஜபுரம் உணவக பெயர் பலகையில் இருந்த ஜெ., படத்தை சில தி.மு.க., நிர்வாகிகளே அகற்றினர். அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பால் சர்ச்சை கிளம்பியது. சில மாதங்களுக்கு முன் ஜெ., படம் இல்லாமல், தமிழ்நாடு அரசு, மாநகராட்சி சின்னங்களுடன் 'அம்மா உணவகம்' என அச்சிட்ட பலகைகள் வைக்கப்பட்டன.
உணவகங்களில் காலையில் 1 ரூபாய்க்கு ஒரு இட்லி, மதியம் 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் மட்டுமே வழங்கப்படுகின்றன.இந்நிலையில், மதுரை புதுார் உணவகத்தில், கவுன்சிலர் அந்தோணியம்மாளின் கணவர் சவரிராயன், விதியை மீறி, இஷ்டத்திற்கு உணவுகளை தயாரித்து சொந்த ஹோட்டலாக மாற்றி விட்டார்.ஒரு நாளைக்கு, 1,200 இட்லி தயாரிக்கும் நிலையில், அதை பாதியாக்கி மீதி மாவில், 5 ரூபாய்க்கு தோசையை ஊற்றுகிறார்.
காலையில் இட்லி தவிர, 5க்கு வெண்பொங்கல், உப்புமா; 10 ரூபாய்க்கு பூரி செட், 5 ரூபாய்க்கு சப்பாத்தி, 5 ரூபாய்க்கு 2 வடை கொடுக்கிறார்.மதியம் 10 ரூபாய்க்கு சாதம், சாம்பார், ரசம், மோர், பொறியல் உட்பட மினி மீல்ஸ், 10 ரூபாய்க்கு ஆம்லேட் என சமைத்து, மலிவு விலையில் வழங்கி, பார்சல் வேறு கொடுத்து பட்டையை கிளப்புகிறார்.

இட்லியை குறைக்க; மதியம் சாம்பார், தயிர் சாதங்களை 'கட்' செய்து, மீல்ஸ் உள்ளிட்ட பிற உணவுகளை தயாரித்து விற்க; மாநகராட்சி வழங்கும் காய்கறி, உணவு பொருட்களில் இஷ்டத்திற்கு சமைக்க; டோக்கன் கொடுக்க தனி ஊழியரை நியமிக்க, இவருக்கு அதிகாரம் கொடுத்தது யார் என தெரியவில்லை.அடுத்து பீட்சா, ஷவர்மா, பிரியாணி சமைத்து விற்கும் முன், மாநகராட்சி இவருக்கு கடிவாளம் போட்டால் நல்லது!
சவரி சொல்வது சரியா?
கவுன்சிலர் கணவர் சவரிராயன் கூறியதாவது:
தமிழக அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரணமாக வழங்கியது போக மீதமுள்ள கோதுமை, ரவை, உளுந்து, எண்ணெய், அரிசி உள்ளிட்ட சில உணவு பொருட்களை, அம்மா உணவகங்களுக்கு கொடுத்தனர்.அந்த பொருட்கள் வீணாக கூடாது என்பதற்காக தான், கூடுதல் உணவுகளை சமைத்து தருகிறோம். விற்பனையை அதிகரிப்பதற்காக இந்த உணவகத்தின் மகளிர் குழுவினர் முட்டையும் தருகின்றனர். சிலர் வேண்டும் என்றே எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியால் குற்றம் சாட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE