மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகம் ஐடாஸ் ஸ்கட்டர் வர்த்தக மையத்தில் மடீட்சியாவின் பிக்சல் போட்டோ, வீடியோ கண்காட்சி மே 27 முதல் 29 வரை நடக்கிறது.
மடீட்சியா தலைவர் சம்பத், கண்காட்சி தலைவர் பாரதி கூறியதாவது: புகைப்பட கலைஞர்கள், ஆர்வம் உள்ளவர்களுக்கு இக்காண்காட்சி பாலமாக விளங்கும். கண்காட்சியில் சோனி, நிக்கான், கேனன், பியூஜி, பானோசானிக், கோடெக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
குளிரூட்டப்பட்ட 100 ஸ்டால்களில் போட்டோ, வீடியோகிராபிக், பிரின்டிங் உபகரணங்கள், ஆல்பம், வீடியோ எடிட்டிங் மென்பொருள், பயன்படுத்திய கேமராக்களை வாங்குவது, விற்பது என பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிக்கு வைக்கின்றன. இதோடு பழங்கால கேமரா, போட்டோ கண்காட்சி, ஆடை அலங்கார அணிவகுப்பு உட்பட பல கண்கவரும் நிகழ்ச்சிகள், போட்டோகிராபி கருத்தரங்குகள் நடக்கின்றன.பிறந்த குழந்தைகளை போட்டோ எடுப்பது, கர்ப்ப கால போட்டோக்கள் எடுப்பது உட்பட விதவிதமான போட்டோகிராபி குறித்து பிரபல போட்டோகிராபர்கள் செந்தில்குமார், தனபால் உட்பட பலர் பயிற்சி தருகின்றனர்.
3 நாள் கண்காட்சியில் சிறந்த போட்டோ எடுக்கும் போட்டோகிராபர்களுக்கு மதுரை சங்கீத் வெட்டிங் வில்லேஜ் தலா ரூ.10 ஆயிரம், சவுபாக்கியா ஜூவல்லர்ஸ் தலா ரூ.10 ஆயிரம், ராஜ்மகால் தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்குகிறார்கள்.கண்காட்சிக்கு வருவோருக்கு இலவச மருத்துவ, கண் பரிசோதனை, கொரோனா தடுப்பூசி, பேசிக் கேமரா சர்வீஸ் முகாம்கள் நடக்கின்றன. பிற மாநில புகைப்பட கலைஞர்களும் வரவுள்ளனர் என்றனர்.காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.