தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி பேச்சு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்து, சென்னை சென்றேன். அப்போது, மாநில இளைஞரணி செயலரானேன். சட்டசபை தேர்தலில் பிரசாரத்தை முடித்து சென்றேன். தற்போது எம்.எல்.ஏ.,வாக வந்திருக்கிறேன். மீண்டும் கிருஷ்ணகிரி வந்துள்ளதால், 'வருங்கால அமைச்சர்' என, மாவட்ட செயலர் பிரகாஷ் கூறினார். ஆசைப்படலாம்; பேராசைப் படக்கூடாது. அமைச்சர் பதவி பெற, அனுபவம், உழைப்பு வேண்டும்.
அமைச்சர் பதவியை ஏத்துக்கிற அளவுக்கு அனுபவமும், உழைப்பும் தங்களுக்கு இல்லை என்கிறீர்களா...? இந்த, 'தன்னடக்கம்' என்ற ஒரே தகுதிக்காகவே, தங்களுக்கு அமைச்சர் பதவி தேடி ஓடி வரும் பாருங்க!
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் விஜயராகவன் பேட்டி: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. ஆனால், பெரும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகைகள் வழங்கி வருவதால், கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, ஆக., 1ல், நாடு முழுதும், 500 இடங்களில் போராட்டம் நடைபெறும்.
ஜூன், ஜூலைக்கு பிறகு வர்ற ஆகஸ்ட் மாதம் நடத்தப் போற போராட்டத்துக்கு, இப்பவே, 'பில்டப்' குடுக்கிறது எல்லாம் ரொம்பவே ஓவர்!
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: மது வருமானம் உயர, உயர, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் சீரழிவது அதிகரிக்கும். இந்த உண்மை தெரியாதது போலவே, தமிழக அரசு நடந்து கொள்ளக் கூடாது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின், மதுவிலக்கை அமல்படுத்துவது தான் தன் நோக்கம் என, முதல்வர் கூறியிருந்தார். அதை செயல்படுத்தும் நேரம் வந்து விட்டது. இனியும் தாமதிக்காமல், மதுவிலக்கை செயல்படுத்தும் கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எல்லா உண்மையும் தெரியும்... அரசின் அட்சய பாத்திரமான 'டாஸ்மாக்'கை மூட முன்வருவரா என்பது கேள்வி தான்!
அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் அறிக்கை: குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வை, தமிழக அரசு ஜனவரி முதல் நிறுத்தி வைத்துள்ளது. அதை வழங்கக் கோரி சென்னையில், மே, 13ல் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அப்போதும், அரசு உறுதி அளித்தபடி அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, ஜூன், 13 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ரேஷன் ஊழியர்கள் ஈடுபடுவர்.
நீங்க வேலை நிறுத்தம் செய்றதும், அவங்க கூப்பிட்டு பேசுறதும், நாலு மாசத்துக்கு ஒருமுறை நடந்துட்டே தான் இருக்கு... போரடிச்சு போச்சு, போங்க!