வாணியாறு பாசன விவசாயிகள்
சங்க தேர்தல்; 64 பேர் வேட்புமனு
பாப்பிரெட்டிப்பட்டி, மே 24--
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வாணியாறு அணை பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் வரும், 31ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்று தாலுகா அலுவலகத்தில் அரூர் ஆர்.டி.ஓ., முத்தையனிடம், எட்டு சங்கங்களை சேர்ந்த, 64 பேரில், 10 பேர் தலைவருக்கும், 54 பேர் இயக்குனர்களுக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனு பரிசீலனை நாளை, 25ல் நடக்கிறது.
போலீசில் புகாரால் கோவிலில்
காதலியை மணந்த காதலன்
அரூர், மே 24-
கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியை சேர்ந்தவர் பெரியசாமி, 27. இவர், மொரப்பூர் வனச்சரக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான கீதா, 26, என்பவரும் கடந்த, ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பெரியசாமிக்கு அரசு பணி கிடைத்ததால், கீதாவை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கீதா அளித்த புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் பெரியசாமியிடம் விசாரித்தனர். அப்போது, கீதாவை திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து, இருவருக்கும் போலீஸ் ஸ்டேஷன் எதிரிலுள்ள விநாயகர் கோவிலில், வி.சி., கட்சி பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.
போலீசார் மீது மூதாட்டி புகார் மனு
தர்மபுரி, மே 24-
தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய, மகனுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரூர் அடுத்த போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த மூதாட்டி சரசு, 76, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
என் மகன் பொன்னுவேல், மகள் விஜயா. இவர்கள் குழந்தையாக இருக்கும்போதே என் கணவர் முத்துசாமி இறந்து விட்டார். இதையடுத்து, அவரின், 15 ஏக்கர் நிலத்தை, என் பெயரில் மாமனார் எழுதி வைத்தார். சொத்தை பாதுகாத்து, இரு குழந்தைகளையும் வளர்த்தேன். இந்நிலையில் பொன்னுவேல், 15 ஏக்கரையும் தன் பெயரில் எழுதி வைக்க வேண்டும் என, என்னை கொடுமைப்படுத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக செயல்படும் மொரப்பூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
ஆடு திருடர்கள் என நினைத்து
தாக்கிய நால்வர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி, மே 24-
போச்சம்பள்ளி அடுத்த மல்லிகல்லை சேர்ந்தவர் சிங்காரவேலன், 25. போச்சம்பள்ளி சிப்காட்டிலுள்ள ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த, 21ல் இரவு, 9:00 மணியளவில் தன் நண்பர்களான தாசிகானுார் சுப்பிரமணி, 23, மற்றும் கார்த்திக் ஆகியோருடன் பைக்கில் சென்றுள்ளார். குருபரப்பள்ளி அடுத்த சின்னகுட்டூர் அருகே சென்றபோது அப்பகுதியை சேர்ந்த சிலர், ஆடு திருடும் கும்பல் என நினைத்து, பைக்கில் சென்றவர்களை வழிமறித்து தாக்கியுள்ளனர். சிங்காரவேலன் புகார்படி, சின்னகுட்டூரை சேர்ந்த பிரகாஷ், 35, ராஜாமணி, 30, ஆறுமுகம், 35, முருகன், 32, ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிந்து குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு
நலத்திட்ட உதவிகள்
ஓசூர், மே 24-
ஓசூர் தாலுகா, தொரப்பள்ளி அக்ரஹாரம், அலசப்பள்ளி, பட்டவாரப்பள்ளி மற்றும் பெலத்துார் ஆகிய பஞ்.,க்களில், வேளாண் உழவர் நலத்துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா, ஓசூர் ஆர்.டி.ஓ., தேன்மொழி ஆகியோர் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
* அரூர் ஊராட்சி ஒன்றியம் மோப்பிரிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில், உதவி வேளாண் இயக்குனர் (பொறுப்பு) இளவரசி தலைமை வகித்தார். அரூர், அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினார்.இதோபோல் ஊத்தங்கரை, பாலகோட்டில் நடந்தது.
கைப்பந்து போட்டிக்கு அழைப்பு
பாலக்கோடு, மே 24-
பாலக்கோடு அடுத்த அமானிமல்லாபுரத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதி பொதுமக்கள் சார்பில் வருகிற, 28, 29ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கைப்பந்து போட்டி நடக்கிறது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என, விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதியவர் சடலம் மீட்பு
ஓசூர், மே 24-
சூளகிரி அடுத்த காமன்தொட்டியில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக, வி.ஏ.ஓ., பாக்கியராஜ், சூளகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்ததாகவும், உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும், போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
8 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா
ஏற்றுக்கொள்ள கலெக்டரிடம் மனு
தர்மபுரி, மே 24-
தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டி கிராம ஊராட்சியை சேர்ந்த, எட்டு வார்டு கவுன்
சிலர்கள் தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்ய
தர்ஷினியிடம் மனு கொடுத்தனர்.
அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டி பஞ்.,ல் உள்ள குக்கிராமங்களில் இருளர்கள், மலைவாழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பஞ்., வார்டு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்படுவதில்லை. நாங்கள் பதவியேற்ற நாள் முதல் இதுவரை பஞ்., நிதிநிலை குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. பஞ்.,ல் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி தொடர்பாக நாங்கள் தெரிவித்து வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது இல்லை. எனவே, பஞ்., நிர்வாகத்தை ஜனநாயக முறைப்படி நடத்துவதை, அதிகாரிகள் ஆய்வு நடத்தி உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை எடுக்கா விட்டால், எட்டு வார்டுகளின் உறுப்பினர்களான நாங்கள்,
பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளோம். இதை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE