மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவின் ௩௧ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.அதற்கு இரு நாட்களுக்கு முன், அவரது கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரின் விடுதலையை ஆளுங்கட்சியான தி.மு.க., உட்பட, சில கட்சிகள் கொண்டாடி வருவது, நடுநிலையாளர்கள் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991 மே 21ல், சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதுாரில், விடுதலை புலிகளின் தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், 1998ல் பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து, தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மேல் முறையீட்டில், 199௯ல், சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை உறுதியானது. மற்ற மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.பின், 2000 ஏப்ரல் 26ல், நளினியின் துாக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். அந்த கருணை மனு மீது, ஜனாதிபதியாக பதவி வகித்த, கே.ஆர்.நாராயணன், அப்துல்கலாம் ஆகியோர் உரிய காலத்திற்குள் முடிவு எடுக்காததால், ௨௦14ல் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. இதுவே, உலகையே உலுக்கிய படுபாதக செயலை செய்தவர்களுக்கு பெரிய மன்னிப்பாகும்.
இதையடுத்து, ராஜிவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்ததால், அவர்களை விடுதலை செய்யும்படி, முந்தைய அ.தி.மு.க., அரசு முடிவு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரை மீது , கவர்னர் முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டதால், பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட போது, குற்றவாளிகளுக்கு ஆதரவாக, தமிழக அரசு வாதாடியதால், உச்ச நீதிமன்றம் அரசியல் சட்டத்தின், ௧௪௨வது பிரிவின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது.அத்துடன், சி.பி.ஐ., விசாரித்த வழக்கில், குற்றவாளிகளை விடுவிக்கும் விஷயத்தில், முடிவு எடுக்கும் உரிமை, மத்திய அரசுக்குத் தான் உள்ளது என்ற வாதத்தை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை யார் விடுதலை செய்ய வேண்டும் என்பதில், மத்திய, மாநில அரசுகள் இடையே நிலவிய குழப்பத்திற்கு, உச்ச நீதிமன்றமேதீர்வு கண்டுள்ளது.
அத்துடன் ஒரே வழக்கில், இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளையும் வழங்கியுள்ளது. அதே நேரத்தில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜின் படுகொலை நிகழ்ந்த போது, அவருடன் பலியான போலீஸ் அதிகாரிகள், அப்பாவிகள் மற்றும் காயமடைந்தவர்களின் தரப்பு வாதத்தை கேட்கவும் இல்லை. அவர்களை பற்றி நினைத்துப் பார்க்கவும் இல்லை. கவர்னர் தரப்பில் நிகழ்த்தப்பட்ட காலதாமதமே பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளது.பேரறிவாளன் விடுதலை வாயிலாக, மத்திய அரசு, இந்திய தண்டனை சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
ஆயுள் தண்டனை என்பது, ஆயுள் முழுக்குமா அல்லது குறிப்பிட்ட ஆண்டுகள் தானா என்பதை நிர்ணயிக்க வேண்டும். ராஜிவ் படுகொலை போன்ற, நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடுக்கப்பட்டது போன்ற வழக்குகளில், ஒன்றுக்கு மேற்பட்ட முறை, நீதிமன்றங்கள் கருணை காட்ட முடியுமா என்பதையும் தீர்மானிக்க வேண்டியது அவசியம்.மேலும், அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே, உச்ச நீதிமன்றம் அரசியல் சட்டத்தின், ௧௪௨வது பிரிவின் கீழ் தீர்ப்பு வழங்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், இப்படிப்பட்ட கொடூர கொலை வழக்குகளில், அந்தப் பிரிவை பயன்படுத்தலாமா, கூடாதா என்பதையும், பார்லிமென்டில் அரசியல் சட்ட திருத்தம் வாயிலாக முடிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு உள்ளதால், இனி ராஜிவ் கொலை வழக்கின் மற்ற குற்றவாளிகளும் விடுதலை செய்யும்படி கோரிக்கை விடுப்பர். அதைத் தொடர்ந்து, கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளையும் விடுதலை செய்யும்படியும் தமிழக அரசும், அமைச்சரவையும் தீர்மானம் நிறைவேற்றலாம். அதன் மீது கவர்னர் விரைவில் முடிவெடுக்காவிட்டால், அவர்களும் உச்ச நீதிமன்றத்தை நாடி விடுதலை பெறுவர். மொத்தத்தில் பேரறிவாளன் விடுதலை விஷயத்தில், தவறான முன் உதாரணத்தை, தமிழக அரசும், உச்ச நீதிமன்றமும் ஏற்படுத்தி விட்டன என்பதே நிதர்சனமான உண்மை.