ஆண்டிபட்டி: ஏக்கக்கோவில் ஊராட்சி சித்தையகவுண்டன்பட்டியில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியம், ஏத்தக்கோவில் ஊராட்சி, சித்தையகவுண்டன்பட்டியில் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இக்கிராமத்தில் 8 பெரிய தெருக்கள், 6 சிறிய தெருக்கள் உள்ளன. தெருக்களிலும் சிமென்ட்ரோடு, வடிகால் வசதி இல்லை. ஊராட்சிகளில் துப்புரவு பணி முறையாக நடக்காததால் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர், ஆழ்துளை குழாய் நீர் இரண்டையும் கலந்து மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி வினியோகம் செய்கின்றனர். ஆண், பெண் பொதுக்கழிப்பறை வசதி இல்லாததால் பலரும் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். கிராம மக்கள் கருத்து:
நிழற்குடை இல்லை
சி.வேல்முருகன்: கிராமத்தின் நுழைவு பகுதியில் நிழற்குடை வசதி இல்லை. சேதமடைந்த நிழற்குடை அகற்றி 5 ஆண்டு ஆகிறது. மழை, வெயிலில் பஸ்சிற்கு திறந்த வெளியில் காத்திருந்து சிரமப்படுகின்றனர். இங்கு ரூ. 13 லட்சத்தில் கட்டப்பட்ட சேவை மைய கட்டடம் பயன்பாடின்றி புதர்மண்டியுள்ளது. சுடுகாடு பகுதியில் தண்ணீர் வசதி இல்லை. இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது ஒரு கி.மீ., தூரம் தண்ணீர் சுமந்து செல்ல வேண்டியுள்ளது.
இருளில் தவிக்கும் தெருக்கள்
வி.நாகேஸ்வரன்: பெண்கள் கழிப்பறை தண்ணீர் வசதி இன்றி பயன்படுத்த முடியாமல் புதர்மண்டியுள்ளது. இப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. கழிப்பறையை ஒட்டி உள்ள குப்பை கிடங்கை மாற்றவேண்டும். கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கான தொட்டியில் தண்ணீர் நிரப்புவதில்லை. இந்த தொட்டிக்கு ஊராட்சி சார்பில் தனியாக தண்ணீர் வழங்க வேண்டும். அனைத்து இடங்களிலும் தெருவிளக்குகள் போதுமான அளவு இல்லை. இரவில் இருள் சூழ்ந்து உள்ளது. தண்ணீர் வினியோகத்தை பரவலாக்க பொதுக் குழாய்களை அதிகப்படுத்த வேண்டும்.
சிமென்ட் ரோடு தேவை
ரா.கணேசன்: கிராமத்தில் நாடக மேடை மேற்கூரை சேதமடைந்து மழைக்காலத்தில் நீர் கசிவு ஏற்படுகிறது. அருகில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு மேல் மூடி சேதமடைந்ததால் தண்ணீர் அசுத்தமடைகிறது.இதனை சீரமைக்க பல மாதங்களாக நடவடிக்கை இல்லை. சமுதாயக் கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. நாடக மேடை அருகே உள்ள தெருக்களில் வடிகால் வசதியுடன் சிமென்ட் ரோடு அமைக்க வேண்டும். ஊராட்சி தலைவர் ஏத்தக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் சித்தயகவுண்டன்பட்டிக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
நிதி வசதி இன்றி சிரமம்
ஏ.பேச்சியம்மாள், ஏத்தக்கோவில் ஊராட்சி தலைவர்: ஊராட்சியில் நிதி ஆதாரம் இல்லை. எப்படி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியும். பொது மக்களின் புகார்கள் குறித்து ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.ஒன்றிய பொது நிதி, மாவட்ட கவுன்சில் நிதிகளில் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஊராட்சிக்கு நிதி கிடைக்கும் பட்சத்தில் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE