சண்டிகர்: அரசு பணி ஒப்பந்தங்களுக்கு தனக்கு ஒரு சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும் என கேட்ட பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அரசு பணி ஒப்பந்தங்களுக்கு தனக்கு ஒரு சதவீதம் கமிஷன் வேண்டும் என அமைச்சர் விஜய் சிங்லா கேட்டுள்ளார். இது தொடர்பாக புகார் வந்ததால், விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததால், விஜய் சிங்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்திய வரலாற்றில் இரண்டாவது முறையாக, ஊழல் புகாருக்கு உள்ளான தனது அமைச்சர் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2015ல் ஊழல் புகார் காரணமாக அமைச்சரை பதவி நீக்கம் செய்து கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து விஜய் சிங்லா மீது வழக்குப்பதிவு செய்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக முதல்வர் பக்வந்த் மன் கூறுகையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மியை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர். அதற்கு ஏற்ப செயல்பட வேண்டியது நமது கடமை. இந்திய தாய்க்கு, கெஜ்ரிவால் போன்ற மகனும், பக்வந்த் மன் போன்ற வீரர்களும் உள்ளனர். ஊழலுக்கு எதிரான போர் தொடரும். ஊழலை அடியோடு ஒழிப்போம் என கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார். ஒரு சதவீத ஊழலுக்கு கூட இடம்இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் பக்வந்த் மன் கூறியுள்ளார்.