நடிகையும், பா.ஜ., பிரமுகருமான காயத்ரி ரகுராம் அறிக்கை:
சென்னையில் மட்டும், 20 நாட்களில், 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும். முன்னாள் பிரதமரின் மறைவுக்கு காரணமான பேரறிவாளன் விடுதலையை, தி.மு.க., கொண்டாடிய போதே, நாம் புரிந்து கொள்ள வேண்டும். 'கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் இருக்கிற சென்னையில, ஒரு நாளைக்கு ஒரே ஒரு கொலை தானே விழுந்திருக்கு' என்று கூட தி.மு.க.,வினர் சமாளிப்பாங்க!
மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை:
திருச்சி, திருவெறும்பூரில் கல்லுாரி மாணவியை காதலிக்கச் சொல்லி இளைஞர் ஒருவர் கட்டாயப்படுத்தி, அவர் மறுக்கவே விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். காதல் என்பது கட்டாயத்தால் வராது என்பதை, இளைஞர்கள் உணர வேண்டும். காதலுக்காக கொலை செய்வதும், தற்கொலை செய்து கொள்வதும் முட்டாள்தனம் என்ற விழிப்புணர்வை இளைஞர்கள், மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு, அரசுக்கு மட்டுமின்றி நம் சமுதாயத்திற்கும் இருக்கிறது. பெண்களை துரத்தி, துரத்தி காதலிக்கணும்கிறதை கற்று கொடுத்ததே, சினிமா தானே... அட, உங்க தலைவர் கூட, வாழ்வே மாயம் தொடங்கி, நிறைய படங்கள்ல இந்த, 'வேலை'யை செய்திருக்காரே?
பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையை, தமிழக வேளாண் துறை அமைச்சர், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஒருமையில் தரக்குறைவாக பேசியதோடு, மிரட்டலும் விடுத்து உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தரம் கெட்ட அவரை, அமைச்சர் பொறுப்பிலிருந்து முதல்வர் நீக்க வேண்டும். கிராமங்கள்ல, 'திட்ட திட்ட திண்டுக்கல்லு; வைய வைய வைரக்கல்லு'ன்னு சொல்வாங்க... அந்த மாதிரி, அண்ணாமலையை தரக்குறைவா திட்டுறாங்கன்னா, அவர் வேகமா வளர்ந்துட்டு இருக்கார்னு அர்த்தம்!
நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மேயர்கள், உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்து விட்டு, அதைப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். டிக்கெட்டுகளை இலவசமாகக் கொடுக்கின்றனர். படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகின்றனர். சிறப்பான மக்கள் பணி. வாழ்க திராவிட மாடல்! கட்சியில, ஆட்சியில பதவிகள் வாங்க, வாங்கிய பதவிகள் நிலைக்க, இந்த மாதிரி, 'எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்' தி.மு.க.,வினருக்கு அவசியம்!