விளக்கேற்றி வையுங்கள்! | Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

விளக்கேற்றி வையுங்கள்!

Added : மே 24, 2022 | கருத்துகள் (7) | |
ச.கண்ணன், வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின் அவர்களே... தங்களின் ஓராண்டு கால ஆட்சி அமர்க்களம். அனைவரும் பாராட்டும் விதமாக, தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறீர்கள்; அதற்காக, அனைவர் சார்பிலும் நன்றி! தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளீர்கள் என்பதும்,
விளக்கேற்றி வையுங்கள்!

ச.கண்ணன், வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: முதல்வர் ஸ்டாலின் அவர்களே... தங்களின் ஓராண்டு கால ஆட்சி அமர்க்களம். அனைவரும் பாராட்டும் விதமாக, தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறீர்கள்; அதற்காக, அனைவர் சார்பிலும் நன்றி!

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளீர்கள் என்பதும், யாவரும் அறிந்ததே. ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, எவ்வித அறிவிப்பையும் நீங்கள் வெளியிடாதது, மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை இல்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு, 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; உங்கள் அரசு இன்னும் அதை அறிவிக்கவில்லை.

பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாத சம்பளத்தை நம்பியே குடும்பம் நடத்த வேண்டியுள்ளது. வேறு வருமானம் இல்லாத குடும்பங்கள் நிறைய உள்ளன. அவர்களும் ஊதியம், அகவிலைப்படியை நம்பியே உள்ளனர். அரசு ஊழியர்கள் லீவு எடுக்காமல் பணிபுரிந்து, அந்த விடுப்பை ஒப்படைத்து, அதன் வாயிலாக கிடைக்கும் ஊதியத்தில் தான், தங்களின் சின்னச் சின்ன கனவை நனவாக்கிக் கொண்டிருந்தனர்; அதுவும் கிடைக்காமல் போனது, மாபெரும் ஏமாற்றமாக உள்ளது.

உங்கள் தலைமையிலான அரசு, அவ்வப்போது பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் நலனுக்காகவும், பாலங்கள் கட்டுதல், கோவில்கள் புனரமைப்பு மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்காகவும் பல கோடிகளை ஒதுக்கி, பணிகள் துவக்கப்பட்டு தொடர்ந்து வீறு நடை போட்டு வருகிறது. ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சலுகைகள் மட்டுமே கானல் நீராக உள்ளன. தயவு கூர்ந்து, இவர்களின் வாழ்விலும் விளக்கேற்றி, ஒளிவீசச் செய்யுங்களேன்!

***


மிகச்சரியான ஆலோசனை!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழில், இம்மாதம், 23ம் தேதி வெளியான, 'பேரறிவாளன் விடுதலை தவறான முன்னுதாரணம்' என்ற தலையங்கம் படித்தேன். பொதுவாக தீர்ப்புகள் திருத்தப்படலாம் என்பர். அந்த வகையில், கீழமை நீதிமன்ற தீர்ப்புகள் மேல் முறையீட்டில் மாறுபடுவதுண்டு. அந்த தீர்ப்புகளே உச்ச நீதிமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளால் உறுதி செய்யப்படும் போது, அதுவே இறுதியாகி விடும்.

ஆனால், பேரறிவாளன் விஷயத்தில், உச்ச நீதிமன்றமே இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது. முதலில் தண்டனை, பின்னர் விடுதலை. மேலும் தலையங்கத்தில் தெரிவித்துள்ளபடி, ஆயுள் தண்டனை எவ்வளவு காலம் என்பது குறித்து, ஒரு உறுதியான முடிவுக்கு வர வேண்டும்; ராஜிவ் கொலை வழக்கு போன்ற நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடும் வழக்குகளில், ஒன்றுக்கு மேற்பட்ட முறை கருணை காட்ட முடியுமா என்பதையும் தீர்மானிக்க வேண்டும் என்ற யோசனையும் வரவேற்கத்தக்தே.

அரசியல் சட்டத்தின், 142வது பிரிவை, இதுபோன்ற கொலை வழக்குகளுக்கு, உச்ச நீதிமன்றம் பயன்படுத்த முடியுமா என்பதற்கு விடை காண வேண்டும் என்பதும் சரியானதே. கொடூர கொலை வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகள், பேரறிவாளன் போல, இனியும் விடுவிக்கப்படாமல் இருக்க, சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். இல்லை என்றால், இனி எந்த ஒரு தேசத்தலைவரை யும் மிகவும் எளிதாக படுகொலை செய்து விடுவர் தேச விரோத சக்திகள்.

மொத்தத்தில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான, 'தினமலர்' நாளிதழின் தலையங்கம், மனச்சாட்சி உள்ள அனைவரின் எண்ணத்தையும் பிரதிபலிப்பதாகவே இருந்தது. அதில், தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள் மற்றும் கருத்துக்கள் மிகவும் சரியானவை மற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே.

***


கொலைகாரர்களின் கூட்டாளிகளே!

சி.ரமேஷ்குமார், பூலுவபட்டி, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவில், இனி முதல்வர்கள், பிரதமர், அமைச்சர்கள் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என, யாரை கொல்வதாக இருந்தாலும், நீங்கள் தமிழர்களை அணுகலாம் என, பகிரங்கமாக 'போர்டு' வைத்து விடலாம். ஏனெனில், தமிழர்கள் கொலை செய்தால், அந்தக் குற்றத்தை இங்குள்ள அரசியல் கட்சியினர், தலையில் துாக்கி வைத்து கொண்டாடுவர்.

நீதிமன்றங்கள் மரண தண்டனையை விதித்தாலும், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க, ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சிகளும் சட்ட உதவி செய்வர்; பின், ஆயுள் தண்டனையிலிருந்து விடுவிக்கவும் ஏற்பாடு செய்வர். விடுதலையானதும் பதவிகள் கொடுத்து, திருமணமும் செய்து வைப்பர். குற்றவாளியின் குழந்தைகள் முதல், அவர்களின் குழந்தைகள் வரை நிதியுதவி செய்து, அந்த குடும்பத்தை இரண்டு, மூன்று தலைமுறைக்கு காப்பாற்றுவர். கொலை செய்தவரை குற்றவாளி என்று சொல்லாமல், 'பெரும் வீரன்' என்றும் பட்டம் கொடுத்து பாராட்டுவர்.

ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை, தமிழகத்தில் ஆளும் கட்சி உட்பட பல கட்சிகள் பாராட்டுவதையும், கொண்டாடுவதையும், போருக்குச் சென்ற வீரன் வெற்றியுடன் திரும்பி வருவது மாதிரி வரவேற்பு கொடுப்பதையும் பார்க்கும் போது, மேற்குறிப்பிட்ட தகவல்களையே, தமிழக அரசும், முதல்வரும், இந்திய சமுதாயத்திற்கும், உலக சமுதாயத்திற்கும் தெரிவிப்பதாக தோன்றுகிறது.

அதே நேரத்தில், விடுதலை செய்யப்பட்ட அந்தக் கொலை குற்றவாளியிடம், 'நீங்கள் கொலைக்கு உடந்தையா... ஏன் அப்படி செய்தீர்கள்?' என்று கேட்க, எந்த ஒரு பத்திரிகையாளருக்கும் திராணி இல்லை. மேலும், தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்காக தீர்க்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றை எல்லாம் விடுத்து, உலகையே உலுக்கிய ஒரு கொடூர கொலை சம்பவத்தின் குற்றவாளியை, ஒரு வீராதி வீரனை போன்று கட்டியணைத்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றது, தமிழகத்திற்கு வெட்கக்கேடான செயல்.

தி.மு.க., தலைவராக மட்டும் இருந்திருந்து, இப்படி செய்திருந்தால் கூட, அது அவரின் விருப்பம் என்றிருக்கலாம். முதல்வர் பதவியில் இருக்கும் போது, இப்படி வரவேற்றது தான், நடுநிலையாளர்கள் அனைவருக்கும் கேவலமான, அவமானமான விஷயமாக தோன்றுகிறது. ஒரு தேசத்தின் பிரதமராக பதவி வகித்த ராஜிவை, கொடூர குண்டு வெடிப்பின் வாயிலாக கொன்றதுடன், அவரின் உடலை சிதறு தேங்காய் போன்று அள்ளிச் செல்லும் கொடுமையை செய்தவர்களை மன்னிப்பதே பாவம். அவர்களை ஆதரிப்பவர்களை அதை விட பெரிய பாவிகளாகவே பார்க்க வேண்டும்.
ராஜிவின் மரணம், காங்கிரஸ்காரர்களுக்கு வேண்டுமென்றால் இன்று வலிக்காமல் இருக்கலாம். ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக எங்களுக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது. பேரறிவாளனை வரவேற்பவர்கள், தமிழர்களின் முகங்களாக எங்களுக்கு தெரியவில்லை; கொலைகாரர்களின் கூட்டாளிகளாகவே தெரிகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X