திருவனந்தபுரம் : கேரளாவில், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட பேரணியில், சிறுவன் ஒருவன், ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக, வெறுப்பை துாண்டும் வகையில் கோஷம் எழுப்பியது தொடர்பாக, இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடற்கரை மாவட்டமான ஆலப்புழாவில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில், சமீபத்தில் பேரணி நடந்தது. இதில், ஒருவரின் தோளின் மீது அமர்ந்திருந்த சிறுவன், ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீது வெறுப்பையும், வன்முறையையும் துாண்டும் வகையில், கோஷங்கள் எழுப்பினார்.
இதன் 'வீடியோ' பதிவு, சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது பற்றி, கேரளாவை சேர்ந்த பா.ஜ., தலைவர் அல்போன்ஸ் கூறுகையில், ''கேரளாவில், ௧௦ ஆண்டுகளுக்கும் மேலாக, ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான வன்முறையை துாண்டும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ''ஐ.எஸ்,. பயங்கரவாத அமைப்புக்கான இந்தியாவின் மையமாக கேரளா மாறியுள்ளது,'' என்றார்.காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறுகையில், ''மதவாதத்தில் யார் ஈடுபட்டாலும் தவறு தான். சிறுவனின் கோஷம் அதிர்ச்சிஅளிக்கிறது,'' என்றார்.இந்த விவகாரம் பற்றி விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், 'சிறிய வயதிலேயே மத வெறி துாண்டப்படுவது கவலையளிக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றது.தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன், 'வெறுப்பை துாண்டும் வகையில் சிறுவன் கோஷமிட்டதற்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கேரள போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, சிறுவனை பேரணிக்கு அழைத்து வந்தவரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். ஆலப்புழா மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் நவாஸ் வந்தனம், மாவட்ட செயலர் முஜிப் ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'பேரணியில் என்ன கோஷங்கள் எழுப்ப வேண்டும் என்பதை, குறித்து கொடுத்திருந்தோம். 'ஆனால், வெறுப்பு கோஷங்கள் எழுப்பப்படுவதை அறிந்து, அதை உடனடியாக தடுத்து நிறுத்தினோம்' என, கூறப்பட்டுள்ளது.