கொல்லம் : கேரளாவில், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவி விஸ்மயாவின் கணவர் கிரண் குமாருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, கேரள நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் விஸ்மயா, 22. ஆயுர்வேத மருத்துவம் படித்து வந்த இவருக்கும், கொல்லத்தின் சாஸ்தம்கோட்டா பகுதியை சேர்ந்த மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் கிரண் குமார் என்பவருக்கும், 2020ல் திருமணம் நடந்தது. திருமணத்தில், 100 சவரன் தங்க நகைகள், ஒரு ஏக்கர் நிலம், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. சாஸ்தம்கோட்டாவில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்த விஸ்மயா, கடந்த ஆண்டு, ஜூன் 21ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய தினம், தன் கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். கணவரின் துன்புறுத்தலால் உடலில் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களையும் அனுப்பினார். இதையடுத்து, கிரண் குமார் கைது செய்யப்பட்டார். அவருக்கு, உச்ச நீதிமன்றம் 'ஜாமின்' அளித்தது. இந்த வழக்கு விசாரணை, கொல்லம் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 'விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் குற்றவாளி' என, நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.
விஸ்மயாவின் கணவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சுஜித் உத்தரவிட்டார். இதில், இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை, விஸ்மயாவின் பெற்றோரிடம் நேரடியாக வழங்க உத்தரவிடப்பட்டது. ''கிரண் குமாருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் திருப்தி இல்லை,'' என, விஸ்மயாவின் தாயார் தெரிவித்தார்.
விஸ்மயாவின் தந்தை கூறுகையில், ''நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. என் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது. மேல்முறையீடு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE