திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், சிறப்பு தரிசன வழியில், உள்ளூர் பக்தர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படாததால், உள்ளூர் பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட வாக்குவாதம், கைக்கலப்பில் முடிந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில், பொது தரிசன வழி மற்றும் சிறப்பு தரிசன வழிகள் உள்ளன. பொது தரிசனத்தில் அனைத்து பக்தர்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.சிறப்பு தரிசன வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்ய, கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும்.வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும், காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை சிறப்பு தரிசன வழியில், கட்டணம் ஏதுமின்றி உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
சமீபத்தில் முருகன் கோவில் இணை ஆணையராக பொறுப்பேற்ற விஜயா, வி.ஐ.பி., மற்றும் உள்ளூர் பக்தர்கள் தரிசனத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.அதன்படி, செவ்வாய்க்கிழமையான நேற்று, 100க்கும் மேற்பட்ட உள்ளூர் பக்தர்கள், காலை 6:00 மணி சிறப்பு கட்டண வழியில் இலவசமாக சென்று மூலவரை தரிசிக்க காத்திருந்தனர்.
ஆனால், அவர்களை அனுமதிக்காத கோவில் ஊழியர்கள் சிலர், கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெற்று செல்லும் படிக் கூறியதுடன், 'இது அதிகாரியின் உத்தரவு' என்றும் கூறினர். இதனால், பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, அங்குள்ள 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர் வழியாக, திருத்தணியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், மூலவரை தரிசிக்க சென்ற போது, அங்கிருந்த கோவில் ஊழியர் புருஷோத்தமன் என்பவர், அவரை தடுத்தி நிறுத்தியதுடன், பணம் செலுத்தி டிக்கெட் பெற்று செல்லும்படி கூறினார். இதனால் லோகநாதனுக்கும், ஊழியர் புருஷோத்தமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திடீரென லோகநாதன், ஊழியர் புருஷோத்தமனை சராமரியாக தாக்கினார். அங்கிருந்த ஊழியர்கள், லோகநாதனை சமரசம் செய்து வெளியே அழைத்து வந்து, அவரை தாக்கினர். இதில், லோகநாதனுக்கு கையில் காயம் ஏற்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து புருஷோத்தமன் அளித்த புகாரின் மீது, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும், திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் லோகநாதனிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். திருத்தணி பொறுப்பு டி.எஸ்.பி., அனுமந்தன், மலைக்கோவில் வளாகத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்.
இதையடுத்து, கோவிலில் விசாரணை நடத்திய திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருடன் ஆலோசித்து, விரைவில் மீண்டும் பழைய நடைமுறை அமல்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, உள்ளூர் பக்தர்களிடம் உறுதி அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE