பெரம்பூர் : வடமாநிலத்தில் இருந்து, ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை வாங்கிச் சென்றோர் சிக்கினர்.
சென்னை ஓட்டேரி போலீசாருக்கு, கஞ்சா வியாபாரிகள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை 5:00 மணியளவில், பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் உள்ள மங்களபுரத்தில், கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, மூன்று பைகளில் கஞ்சா பார்சல் கொண்டு சென்ற நபரை மடக்கிப் பிடித்தனர்.அப்போது, அவருக்காக ஆட்டோ நிறுத்தம் அருகே காத்திருந்த, ஒரு பெண் உட்பட நால்வர் தப்பி ஓடினர்.
சிக்கிய நபரிடம் போலீசார் விசாரித்ததில், சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், 24, என்பதும், துணிக்கடை ஊழியர் என்பதும் தெரிந்தது.அவருடன் யோகராஜ், மோகன், பிரகாஷ், இந்துமதி ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, சேலத்தில் இருந்து 'ரொனால்டு டஸ்டர்' காரில் சென்னைக்கு வந்து, அதிகாலை 4:00 மணிக்கு, பெரம்பூர் ரயில் நிலையம் அருகே காத்திருந்தனர்.
அப்போது, கவுகாத்தியிலிருந்து சென்னை வந்த ரயிலில் பயணித்த இருவர், தினேஷிடம் மூன்று பைகளை கொடுத்துள்ளனர்.அதை வாங்கி வரும் போது தினேஷ் சிக்கியதும், அதைக் கண்ட அவரது கூட்டாளிகள் தப்பியதும் தெரிந்தது. அந்த பைகளில், 44 கிலோ கஞ்சா இருந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய நால்வரையும், சில மணி நேரத்தில் பிடித்தனர். ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE