தாம்பரம் : சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரசேகருக்கு, அமெரிக்க நிறுவனத்தின் சார்பில், சர்வதேச சேவையாளர் விருது வழங்கப்பட்டது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் 'மெட் இந்தியா' மருத்துவமனை நிறுவனரும் பிரபல இரைப்பை குடல்நோய் நிபுணருமான டாக்டர் சந்திரசேகர், 'பத்மஸ்ரீ' விருது பெற்றவர்.இவர், மாநில மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் உறுப்பினராகவும், டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலையில் கவுரவ பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள, அந்நாட்டின் இரைப்பை குடல் எண்டோஸ்கோப் அமைப்பு, 22ம் ஆண்டிற்கான, 'கிரிஸ்டல் விருது' எனப்படும், மதிப்புமிக்க 'சர்வதேச சேவை விருது' வழங்கி கவுரவித்துள்ளது.
பன்முக மருத்துவ கல்வி, நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்புடைய பயிற்சிகள் மற்றும் இரைப்பை குடல்நோய் தொடர்புடைய முன்னேற்றங்களை வழங்கியமைக்காக, இந்த விருது, வழங்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் முதல் நபராகவும், தேசிய அளவில் நான்காவது நபராகவும் சந்திரசேகர் இந்த விருதுக்கு, தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
80 ஆண்டுகள் பழமையான இந்த அமெரிக்கன் இரைப்பை குடல் எண்டோஸ்கோப் அமைப்பு, 15 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டதாகும்.சந்திரசேகர் ஏற்கனவே 2019ம் ஆண்டு, உலக இரைப்பை குடல் அமைப்பின் சிறந்த விருது மற்றும் அமெரிக்க இரைப்பை குடல் சிகிச்சை கல்லுாரியின், சமூக சேவைக்கான விருதுகளையும் வென்றுள்ளார்.மேலும், இந்திய மருத்துவ சங்கத்தின், 'கர்க்' வாழ்நாள் சாதனையாளர் விருது, ஜீவ்ராஜ் மேத்தா தேசிய தங்கப் பதக்க விருதுகளையும் பெற்றுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE