கோலார்:உலக அளவில் பிரசித்தி பெற்ற கோலார் மாவட்டம், சீனிவாசப்பூர் மாம்பழ மார்க்கெட்டில் இருந்து ஆண்டுதோறும் டன் கணக்கில் மாம்பழங்கள் ஏற்றுமதியாகின்றன.
பெங்களூரில் இருந்து 100 கி.மீ., தொலைவில், ஆந்திர மாநில எல்லையில் கோலார் அருகே உள்ள சீனிவாசப்பூரில் அதிகமாக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஆசியாவிலேயே அதிகமாக விளைவிக்கும் பகுதியாகவும் விளங்குகிறது.
கோலார் மாவட்டம் முழுதும் 45 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் சீனிவாசப்பூரில் மட்டுமே 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. அதிக அளவில் சாகுபடி செய்தாலும், அவற்றை விற்பனை செய்ய போதிய இடவசதி இல்லாமல் இருந்தது.
20 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர், சீனிவாசப்பூர் அருகே சோமயாஜாலபள்ளி கிராமத்தில் இருந்த கோசாலைக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தில், மாம்பழ சந்தை அமைக்க இடம் ஒதுக்கினார்.இதையடுத்து, அங்கு மாம்பழ சந்தை துவக்கப்பட்டது. அதன்பின் விற்பனைக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டன. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு ரயில் மூலமும்; வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலமும் அனுப்பப்படுகின்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, எஸ்.எம்.கிருஷ்ணா, அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் பேசி அனுமதி பெற்றார். தற்போது வெளிநாடுகளுக்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப் படுகிறது.சீனிவாசப்பூர் மாம்பழ சந்தைக்கு, கோலார் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திராவில் இருந்தும் விற்பனைக்காக ஏராளமான விவசாயிகள் மாம்பழங்களை கொண்டு வருகின்றனர்.
ஆண்டுக்கு 7 முதல் 8 லட்சம் டன் மாம்பழங்கள் விற்பனையாகின்றன. 4 லட்சம் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஆண்டு முழுதும் மாம்பழங்கள், மாங்காய்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், ஏப்ரல் முதல் ஜூலை வரை தான் சீசன். இந்த கால கட்டத்தில் சீனிவாசப்பூர் மாம்பழ சந்தை களைகட்டும்.கடந்த இரண்டு ஆண்டாக கொரோனா பரவலால் சீனிவாசப்பூர் மாம்பழ சந்தையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாததால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.