ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ரெய்டு கட்டுக்கட்டாக ரூ.3.41 கோடி சிக்கியது| Dinamalar

'ஆருத்ரா கோல்டு' நிறுவனத்தில் 'ரெய்டு' கட்டுக்கட்டாக ரூ.3.41 கோடி சிக்கியது

Added : மே 24, 2022 | |
சென்னை : பொது மக்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்த, 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' என்ற நிறுவனத்தின் அலுவலகம், அதன் இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களின் வீடு என, 26 இடங்களில், போலீசார் சோதனை நடத்தி, 3.41 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலை, மேத்தா நகரில், 'ஆருத்ரா கோல்டு டிரேடிங் கம்பெனி' தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இதன் கிளை அலுவலகங்கள், திருவள்ளூர்,
'ஆருத்ரா கோல்டு' நிறுவனத்தில் 'ரெய்டு'  கட்டுக்கட்டாக ரூ.3.41 கோடி சிக்கியது


சென்னை : பொது மக்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்த, 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' என்ற நிறுவனத்தின் அலுவலகம், அதன் இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களின் வீடு என, 26 இடங்களில், போலீசார் சோதனை நடத்தி, 3.41 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலை, மேத்தா நகரில், 'ஆருத்ரா கோல்டு டிரேடிங் கம்பெனி' தலைமை அலுவலகம் செயல்படுகிறது.

இதன் கிளை அலுவலகங்கள், திருவள்ளூர், ஆரணி என, பல மாவட்டங்களில் உள்ளன. இந்நிறுவனத்தை ராஜசேகர் என்பவர் நடத்தி வருகிறார். இவர், நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். இதன் இயக்குனர்களாக பாஸ்கர், மோகன்பாபு என, எட்டு பேர் உள்ளனர்.சமீபத்தில், 'ஆருத்ரா இருக்க, கவலைகள் எதற்கு' என, பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 'எங்கள் நிறுவனத்தில், மாதம், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், நாங்கள், 10 மாதத்திற்கு வட்டியாக, 36 ஆயிரம் ரூபாய் வீதம், 3.60 லட்சம் ரூபாய் தருவோம்.

அத்துடன், 4 கிராம் தங்க நாணயம் வழங்குவோம்' என, அறிவித்தனர். இதை நம்பி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர்.இந்நிலையில், இத்திட்டத்தை அமல்படுத்துவது போல, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, சேவூர் பகுதியில், ஆருத்ரா கிளை அலுவலகம் திறந்தனர். இந்நிறுவனம் சார்பில் பண மோசடி நடப்பது பற்றி, சென்னையில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் மோசடி நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ராஜசேகர் உள்ளிட்டோர் மீது, மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை என, ஆருத்ரா கோல்டு டிரேடிங் கம்பெனியின் அலுவலகம், இயக்குனர்கள், ஊழியர்கள் வீடு என, 26 இடங்களில் நேற்று காலை, 7:00 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், கட்டுக்கட்டாக, 3.41 கோடி ரூபாய் ரொக்கம்,48 கம்ப்யூட்டர்கள், ஆறு மடிக்கணினிகள், 44 மொபைல் போன்கள், 60 சவரன் நகை, இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். 11 வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். இந்த மோசடி தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். ராஜசேகர் பின்னணியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் இருப்பது, போலீசாருக்கு தெரியவந்துள்ளது.


வழக்கறிஞர் மறுப்பு

ஆருத்ரா நிறுவன வழக்கறிஞர் நரேஷ் கூறுகையில், ''நாங்கள், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வட்டியாக, 36 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என, எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எங்கள் நிறுவனத்தின் பெயரை கெடுக்க, மர்ம நபர்கள் சதி செய்கின்றனர். அதுபற்றி, போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X