செங்கல்பட்டு:முதல் மனைவியை ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்தவருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செங்கல்பட்டு, நென்மேலி அடுத்த துஞ்சம் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன், 38, என்பவருக்கும், விஞ்சியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரியாவுக்கும், 2015ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறு காரணமாக, தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அன்பரசன், முள்ளிக்கொளத்துாரைச் சேர்ந்த புனிதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர்.இதனால் பாதிக்கப்பட்ட பிரியா, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அன்பரசன், அவரது பெற்றோர், இரண்டாவது மனைவி புனிதா ஆகியோரை கைது செய்தனர்; ஜாமினில் வெளியில் உள்ளனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அன்பரசனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், நீதிபதி தனலட்சுமி,தீர்ப்பளித்தார். மேலும், பெற்றோர், இரண்டாவது மனைவி ஆகியோரை விடுதலை செய்தார்.